சில ஆயிரம் பேரை பிடிக்க பல லட்சம் பேரிடம் சோதனை நடத்துவதா? அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன?

அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போலி ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் சில ஆயிரம் பேரை பிடிக்க பல லட்சம் பேரை சோதனையிடுவதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Update: 2017-08-31 22:45 GMT

கோவை,

வாகனம் ஒட்டுபவர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சாலை பாதுகாப்பு குழு, கடந்த 15.6.2017 முதல் புதிய போக்குவரத்து சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல், சிக்னலில் நிற்காமல் செல்பவர்கள், அதிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசிக் கொண்டே வாகனங்கள் ஓட்டுபவர்கள், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இத்தகைய போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து அவர்களின் ஓட்டுனர் உரிமத்தின் நகலை அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு போலீசார் அனுப்பி வைத்து வருகின்றனர். அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்களில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று தாங்கள் போக்குவரத்து விதிகளை மீறியது ஏன் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அசல் ஓட்டுனர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.

ஒவ்வொரு விதிமுறை மீறல்களுக்கும் இத்தனை நாட்கள் ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தக் கூடாது என்ற நடைமுறை உள்ளது. அதுவரை அந்த நபர் வாகனங்களை ஓட்டக்கூடாது. அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் வட்டார அலுவலகத்துக்கு சென்று ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம். அதுவரை அந்த ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக நீக்கம் செய்து(சஸ்பென்டு) வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு தற்காலிமாக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுனர் உரிமத்தின் நகலை(ஜெராக்ஸ்) வைத்து வாகனங்கள் ஓட்டுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. கோவை மாநகரில் இதுபோன்று பல ஆயிரம் பேர் வாகனங்கள் ஓட்டுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் போலியான ஓட்டுனர் உரிமங்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. ஒரு ஓட்டுனர் உரிமத்தை நகல் எடுத்து அதில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல் போன்ற பல திருத்தங்கள் செய்து ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓட்டுனர் உரிமங்கள் எடுத்துக் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் கூறியதாவது:–

அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகனங்களில் வைத்திருந்தால் அவை திருட்டுபோகவோ, தொலைந்து போகவோ வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு அவை தவறி விட்டால் அவற்றுக்கு நகல் வாங்குவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இதற்காக போலீசாரிடமிருந்து கண்டுபிடிக்க முடியாத ஆவணம் என்ற சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக பொது மக்கள் போலீஸ் நிலையங்களுக்கு அலைய வேண்டும்.

அசல் ஓட்டுனர் உரிமத்தை காரில் வைத்திருப்பதாக வைத்துக் கொண்டால் அந்த நபர் திடீரென்று தனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு சென்றால் அவரிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இருக்காது. எனவே அவருக்கு அபராதம் விதிக்கவேண்டிய நிலை ஏற்படும்.

லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர்கள் அவர்களின் அசல் ஓட்டுனர் உரிமம் லாரி உரிமையாளர்களிடம் தான் இருக்கும். அது போன்ற ஓட்டுனர்கள் அசல் உரிமம் வைத்திருக்க வாய்ப்பிருக்காது. எனவே அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அசல் ஓட்டுனர் உரிமங்களை வாகனங்களிலோ, தங்களிடமோ வைத்திருப்பதில் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் ஏராளமாக உள்ளன.

முடக்கி வைக்கப்பட்ட அசல் ஓட்டுனர் உரிமங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருக்கும் போது அதைபோல நகல் உரிமங்களை வைத்துக் கொண்டு வாகனங்கள் ஒட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்கள் எவை என்ற விவரங்களை அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி விடலாம். அந்த பட்டியலில் உள்ள ஓட்டுனர் உரிமங்களை வைத்திருப்பவர்களை மட்டும் போலீசார் பிடிக்கலாம். இதற்கான செல்போன் செயலியை போக்குவரத்து போலீசார் பதிவிறக்கம் செய்து அதில் முடக்கி வைக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களின் விவரங்களை வைத்துக் கொள்வதின் மூலம் சோதனையின் போதே முடக்கி வைக்கப்பட்ட உரிமத்தின் ஓட்டுனரை பிடித்து விடலாம்.

எனவே தற்காலிகமாக முடக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் வைத்துக் கொண்டு வாகனங்களை ஓட்டும் சில ஆயிரம் பேரை பிடிப்பதற்கு பதிலாக பல லட்சம் பேர் வைத்திருக்கும் ஓட்டுனர் உரிமங்களை சோதனையிடுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும். இதில் போக்குவரத்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தகராறு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இதில் சில மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்