சான்றிதழ் காணாமல் போனது குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

சான்றிதழ்கள் காணாமல் போனது குறித்து ஆன்லைனில் புகார் அளித்தல் மற்றும் சாலை விபத்துகள் தொடர்பான ஆவணங்களை ஆன்லைன் மூலம் பெறுதல் வசதிகளை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

Update: 2017-08-31 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்துகள் தொடர்பான ஆவணங்களை இனி ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் சான்றிதழ்கள் ஏதேனும் காணாமல் போனால், அதுகுறித்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம். இந்த 2 புதிய வசதிகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த திட்டத்தில் பெண் ஒருவருக்கு ஆன்லைனில் பெறப்பட்ட சாலை விபத்து குறித்த ஆவணம் மற்றும் ஒருவருக்கு சான்றிதழ் காணாமல் போனது தொடர்பாக ஆன்லைனில் புகார் செய்து, அதற்குரிய ஆவணம் பெறுவதையும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மாவட்டத்தில் கடந்த மார்ச் 1–ந்தேதிக்கு பிறகு போலீஸ் நிலையத்தில் பதிவாகும் வழக்குகள் குறித்த அனைத்து விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு காவல் துறை சார்பில் 2 புதிய இணையதள வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு ஆவணங்களை ஆன்லைன் மூலம் பெறலாம் மற்றும் பள்ளி படிப்பு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்கள் காணாமல் போனது குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.

இதன்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டோர் மற்றும் இறந்து போனவர்களின் வாரிசுதாரர்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை ஆன்லைன் மூலம் பெறலாம். ஒரு ஆவணத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை(நெட் பேங்கிங்) மூலம் இந்த தொகையை செலுத்த வேண்டும். இதேபோல் காணாமல் போன பாஸ்போர்ட்டு, வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை உள்ளிட்ட சான்றிதழ்கள் குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.

மேலும் தற்போது புளூவேல் என்ற விபரீத இணையதள விளையாட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. ஸ்மார்ட் போன்கள் மூலம் பரவும் இந்த விளையாட்டு மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் உள்ளதால், புளூவேல் விளையாட்டை மாணவர்கள் விளையாடாதபடி பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஸ் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்