தொலைந்த ஆவணங்கள் குறித்து புகார் அளிக்க புதிய இணையதள பதிவு வசதி

பொதுமக்கள் தொலைந்த ஆவணங்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க இணையதளம் மூலம் பதிவு செய்யும் புதிய வசதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

Update: 2017-08-31 23:00 GMT

ராமநாதபுரம்,

பொதுமக்களுக்கு காவல்துறையின் சேவைகளை மேம்படுத்தி வழங்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறையின் இணையதளத்தின் வாயிலாக தற்போது புதிதாக 2 பதிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுஉள்ளன. http://eservices.tnpolice.gov.in மூலம் இந்த இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுஉள்ளன. இதன்படி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் வழக்கு ஆவணங்களை கோர்ட்டு பயன்பாட்டிற்கு பெறுவதற்கான புதிய வசதியும், தொலைந்துபோன ஆவணங்கள் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து சான்று பெற புதிய பதிவு வசதியும் தொடங்கப்பட்டுஉள்ளது.

இந்த புதிய திட்டத்தின்கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இழப்பீட்டு தொகையை விரைவாக பெற்றுக்கொள்ள வசதியாக விபத்து வழக்குகளில் இறந்தவர்களின் சட்டபிரதிநிதிகள் இந்த வசதியின் மூலம் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புலன் விசாரணையின் போது போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணை அடிப்படையாக கொண்டு இந்த இணையதளத்தில் உள் நுழைந்து நெட்பேங்கிங் மூலம் ரூ.10 கட்டணம் செலுத்தி ஆவணங்களை தனித்தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதேபோல, சில ஆவணங்கள் தொலைந்து போனது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து மனு ரசீது பெற வேண்டும். இந்த நடைமுறையை எளிமைப்படுத்தி பொதுமக்கள் தங்களின் தொலைந்த ஆவணங்கள் குறித்து புதிய இணையதள வசதியின் மூலம் தாங்களே நேரடியாக பதிவு செய்து தொலைந்ததற்கான காவல்துறையின் பதிவு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இதன்படி பாஸ்போர்ட், பான் கார்டு, வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தொலைந்தது குறித்து இந்த முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுடன் பதிவு செய்தால் அந்த எண்ணிற்கு பதிவு எண் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பதிவு அறிக்கை மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முறையால் பொதுமக்கள் தங்களின் தொலைந்த ஆவணங்களை இணையதளம் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் மிகவும் வசதியாக இருக்கும். காவல்துறையின் இந்த சான்றினை கொடுத்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் தங்களின் ஆவணங்களின் நகல் உள்ளிட்டவைகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த 2 வசதிகளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுஉள்ளது. இந்த புதிய இணையதள பதிவு வசதிகளை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பதிவு செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்