பெற்றோர் இழந்த மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பெற்றோர் இழந்த மாணவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் கோகிலா கூறினார்.

Update: 2017-08-31 22:15 GMT

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் பெற்றோர்களை இழந்த மாணவர்கள், தாய் அல்லது தந்தை இழந்த மாணவர்கள் மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நிதி ஆதரவு தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த தொகை தொடர்ந்து 3 ஆண்டுகள் வழங்கப்படும். இது குடும்பத்தில் ஒரு மாணவர் அல்லது மாணவிக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த உதவித்தொகையை பெற ரே‌ஷன் அட்டை, ஆதார் அட்டை, பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ 2, குடும்ப ஆண்டு வருமான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகை விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது வரை மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் வங்கி கணக்கு எண் அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு எண் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 41 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் 51 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வருகிற 15–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் இதுகுறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்