வேலூரில் மாரத்தான் போட்டி 1,350 பேர் பங்கேற்றனர்
வேலூரில் நடந்த மாரத்தான் போட்டியில் 1,350 மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.;
வேலூர்,
மறைந்த தமிழக முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் இளைஞர்களிடையே மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. மாரத்தான் போட்டியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் கிரீன்சர்க்கிள், மக்கான், மகளிர் போலீஸ் நிலையம் வழியாக நேதாஜி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.
இப்போட்டியில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம், டி.கே.எம்.கல்லூரி உள்பட பல கல்லூரிகளை சேர்ந்த 1,350 மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், பெண்கள் பிரிவில் ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி மாணவி சங்கீதா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இவர்கள் உள்பட ஆண்கள், பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ–மாணவிகளுக்கு வேலூரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுகள் வழங்குகிறார்.நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சுரேஷ், மண்டல இணை இயக்குனர் (கல்லூரி கல்வி) வளர்மதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கவிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.