சேலத்தில் உடற்கல்வி ஆசிரியரை கடத்தி தாக்குதல் 9 பேர் கைது

சேலத்தில் உடற்கல்வி ஆசிரியரை கடத்தி சரமாரியாக தாக்கியது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2017-08-31 00:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அப்போது ராசிபுரத்தை சேர்ந்தவரும், எம்.ஏ. பி.எட். படித்தவருமான முருகேசன் (39) என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.

அப்போது வினோத்குமார், ரூ.3 லட்சம் கொடுத்தால் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக முருகேசனிடம் தெரிவித்தார். இதை நம்பி கடந்த 2014-ம் ஆண்டு வினோத்குமாரிடம் ரூ.3 லட்சத்தை அவர் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பின்பு அவர் முருகேசனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முருகேசன், சேலம் வீராணம் அருகே அல்லிக்குட்டை காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். இதனிடையே சீலநாயக்கன்பட்டியில் வினோத்குமார் நிற்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதைக்கேட்ட அவர் 4 பேருடன் மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு நின்ற வினோத்குமாரை மோட்டார்சைக்கிளில் கடத்திக்கொண்டு, அல்லிகுட்டை காலனியில் உள்ள மறைவான இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முருகேசன் உள்பட 13 பேர் சேர்ந்து கட்டை, இரும்புகம்பியால் வினோத்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு காயமடைந்து கிடந்த வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வினோத்குமாரை கடத்தி தாக்கியதாக முருகேசன், அல்லிகுட்டைகாலனியை சேர்ந்த அவருடைய மனைவியின் தம்பி ராஜேஸ்குமார் (28) மற்றும் அவருடைய நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (32), பாண்டியன் (30), பரத் (27), நரேஷ் (25), சரத்குமார் (25), துரை (23), பிரவீன்குமார் (26) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்