நீட் நுழைவு தேர்வு விவகாரம் ரெயில் மறியலுக்கு முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது

நீட் நுழைவு தேர்வு விவகாரம் தொடர்பாக ரெயில் மறியலுக்கு முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-08-30 23:15 GMT

மதுரை,

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவர்களுக்கு மத்திய அரசு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து விட்டதாக கூறியும், இந்த தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை. இதை கண்டித்து ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ.) கட்சியினர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மதுரை மாவட்ட தலைவர் ஜாபர்சுல்தான் தலைமையில் மதுரை கட்டபொம்மன் சிலை அருகே ஒன்று கூடினர். இதில் பொதுச்செயலாளர் பிலால்தீன், பொருளாளர் சுப்ரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் ஜியாவுதீன், சாகுல்ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷம் போட்டு கொண்டு ஊர்வலமாக ரெயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயில் பகுதிக்கு வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவர்களை உள்ளே விட மறுப்பு தெரிவித்தனர். இதனால் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 61 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்