காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு

கோபி அருகே குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-08-30 23:45 GMT

கடத்தூர்,

கோபி அருகே உள்ள தெற்கு பதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். ஈஸ்வரமூர்த்தியும் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா என்கிற சுகுமாரியும் (வயது 27) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நிவாஷ் (2) என்ற மகன் உள்ளான்.

ஈஸ்வரமூர்த்திக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகுமாரி கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். அதைத்தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி அவரது தாய் வீட்டுக்கு சென்று சுகுமாரியை சமாதானம் செய்து அழைத்து வருவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரமூர்த்தி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சுகுமாரியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்பின்னர் ஈஸ்வரமூர்த்தியும், குழந்தை நிவாசும் தூங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் நிவாஷ் அழுது கொண்டிருந்தான். சத்தம் கேட்டு ஈஸ்வரமூர்த்தி எழுந்து பார்த்தார். அப்போது சுகுமாரியை காணவில்லை. வீட்டின் உள்பக்கம் கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு சுகுமாரி கயிறு மற்றும் துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்