எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வாபஸ்: உள்கட்சி விவகாரம் என்று கூறி இருப்பது கவர்னர் பதவிக்கு உகந்ததல்ல துரைமுருகன் பேட்டி

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வாபஸ் பெற்றுள்ள நிலையில் அது உள்கட்சி விவகாரம் என்று கவர்னர் கூறி இருப்பது அவருடைய பதவிக்கு உகந்தது அல்ல என்று கோவையில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரை முருகன் கூறினார்.

Update: 2017-08-31 01:00 GMT

கோவை,

ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் கென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்கும் போது ஓ.பி.எஸ் அணியில் 9 பேர் விலகி இருந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க கூறிய தமிழக கவர்னர் தற்போது ஏன் கூறவில்லை. மேலும் தற்போது உள்ள முதல்–அமைச்சர் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக மனு கொடுத்துள்ளனர், ஆனால் கவர்னர் உள்கட்சி விவகாரம் என்று கூறி இருப்பது அவருடைய பதவிக்கு உகந்தது அல்ல. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வாபஸ் என்பது உள்கட்சி பிரச்சினை அல்ல.

இருந்த போதிலும் கவர்னர் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளது. தமிழக கவர்னர் எதிர்க்கட்சியில் இருந்தவர். ஆளும் கட்சியில் இருந்தவர். மேலும் பாராளுமன்ற உறுப்பினராகவும், மந்திரியாகவும் இருந்தவர். எனவே அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

ஆட்சியை கலைக்க தி.மு.க. சதி செய்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூறுவதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. அவர்கள் நிலையில்லாமல் நிலை தவறி பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்