இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் சரத்குமார் பேட்டி

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், வீட்டிற்கு ஒரு விவசாயி வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரக்குமார் கூறினார்.

Update: 2017-08-31 02:00 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூரை அடுத்த சிராவயல்புதூரில் உள்ள குலதெய்வ கோவிலான காமாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வந்தார். கோவிலில் சாமி தரிசனம் முடிந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

வாக்குரிமை வயது வந்து ஓட்டுப்போட தொடங்கும்போதே அனைவரும் அரசியலுக்கு வந்துவிடுகின்றனர். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால் தி.மு.க தலைவர் கருணாநிதியோடு உடனிருந்தபோது ஊழல் குறித்து பேசாத நடிகர் கமல், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லாத நேரத்தில் ஊழல் குறித்து பேசுவதற்கு காரணம் என்ன என்பது கேள்வியாக உள்ளது. இப்போதுதான் அவருக்கு ஊழல் கண்ணுக்கு தெரிகிறதா. தமிழக மக்கள் 5 ஆண்டு காலம் முழுமையான அரசு நடைபெற வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் வாக்களிக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. முயற்சிப்பது தவறு.

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். வீட்டிற்கு ஒரு விவசாயி உருவாக வேண்டும். அப்போது தான் நாட்டின் முன்னேற்றத்தை காணமுடியும். நான் கல்லூரி நாட்களில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கிராமங்கள் தோறும் அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்து அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்பட்டுள்ளேன்.

ஜி.எஸ்.டி., நீட் தேர்வு வரவேற்கத்தக்கது. இருப்பினும் இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு அமல்படுத்தி இருக்கலாம். நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் கல்வி கொள்கையை மாற்ற வேண்டும். நீட் தேர்வு, நெடுவாசல், கதிராமங்கலம் என பல பிரச்சினைகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்