நொய்யல் ஆற்றில் பாயும் சாயகழிவுநீரால் பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் கலெக்டரிடம் புகார்
திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் பாயும் சாயகழிவுநீரால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
ஈஸ்வரன்(கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்):–
அவினாசியை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் மான்கள் அதிகம் உள்ளன. அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை மான்கள் கடித்து சேதப்படுத்துகிறது. எனவே இந்த மான்களை வனப்பகுதியில் இருந்து வெளியேறாத வகையில் வனத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.ஏ.பி.பாசன நீர் ஆண்டிப்பாளையம், மங்கலம் பகுதி வரை வந்து சேர ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோபால்(பி.ஏ.பி.பாசன சங்கம்):–
காங்கேயம் நிழலி கிராமத்தில் பி.ஏ.பி.பாசன வாய்க்கால் பகுதியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறந்து விடும்போது வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்து வருகிறார்கள். இது இனியும் தொடராமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டியன்கோவில் பகுதியில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்காக விவசாயிகளிடம் இருந்து நிலத்தை தனியார் நிறுவனத்தினர் பெற்றுவிட்டனர். ஆனால் அதற்குண்டான இழப்பீட்டு தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. பொங்கலூர் பகுதியில் விதைப்பண்ணை ஆராய்ச்சி மையம் அமைத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
மதுசூதனன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):–
தட்கல் முறையில் விவசாயிகள் மின் இணைப்பு பெற ரூ.2¼ லட்சம் வரை மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டியிருக்கிறது. இலவச மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகள், வேறு வழியில்லாமல் பணத்தை செலுத்தி மின் இணைப்பை பெறக்கூடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதேநிலை நீடித்தால் இலவச மின் இணைப்பு என்பது கேள்விக்குறியாகும்.
வறட்சி நிவாரண நிதி மாவட்டத்தில் ரூ.82½ கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே விடுபட்ட விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. அவர்களுக்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்.
முத்துசாமி(தமிழக விவசாயிகள் சங்கம்):–
திருப்பூர் பகுதியில் சாயப்பட்டறைகளில் இருந்து சாயகழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நொய்யல் ஆற்றில் விடுவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் தற்போது வரை ஊத்துக்குளி பகுதியில் பயிரிடப்படும் பயிர்கள் சரிவர வளரவில்லை. தொடர்ந்து சாயகழிவுகள் நொய்யல் ஆற்றில் வெளியேறி வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். அதுபோல் அனுமதியின்றி இயக்கும் சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பு செய்கிறார்கள். ஆனால் மின் இணைப்பு வழங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரமசிவம்(பால் உற்பத்தியாளர்கள் சங்கம்):–
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தனியார் நிறுவனத்தில் அதிக விலைக்கு பாலை கொள்முதல் செய்கிறார்கள். ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடம் பாலை கொள்முதல் செய்வதற்கும், தனியார் நிறுவனம் கொள்முதல் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் தலைமையில் தனியாக ஒரு கூட்டம் நடத்தி முறைப்படுத்த வேண்டும்.
சின்னசாமி(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):–
ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட செங்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுகிறது. இந்த வாரசந்தையை விரிவுபடுத்த வேண்டும். கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் பனியன் பிரிண்டிங் பட்டறையில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றுகிறார்கள். இதனால் விவசாய நிலம் பாழடைந்து வருகிறது. அந்த நிறுவனத்தை தடைசெய்ய வேண்டும். பள்ளபாளையம் குளம் 100 ஏக்கர் பரப்பளவை கொண்டது. அந்த குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னுசாமி(மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம்):–
பி.ஏ.பி.பாசனத்துக்கு உட்பட்ட ஆண்டிப்பாளையம் வாய்க்காலில் கடைமடை பகுதியான மங்கலம், சுல்தான்பேட்டை, எம்.செட்டிப்பாளையம் பகுதியில் வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. குடிமராமத்து பணியின் மூலமாக வாய்க்காலை தூர்வாரி 3–வது மண்டல பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
இதற்கு கலெக்டர் பதில் அளித்து பேசும்போது, பி.ஏ.பி.பாசன ஆக்கிரமிப்புகள் குறித்து அந்தந்த ஆர்.டி.ஓ.க்கள் கண்காணிக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் பிரச்சினை தொடர்பாக தனியாக கூட்டம் நடத்தப்படும். நொய்யல் ஆற்றில் சாயகழிவுநீர் வெளியேறுவது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றார். நேற்று நடந்த கூட்டத்தில் 118 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் சப்–கலெக்டர்கள் ஷ்ரவன்குமார்(திருப்பூர்), கிரேஸ் பச்சாவு(தாராபுரம்), வேளாண்மை துறை இணை இயக்குனர் முகமது இக்பால், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) அரசப்பன், உடுமலை ஆர்.டி.ஓ. சாதனைக்குறள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.