தேனி அருகே அ.தி.மு.க.வினர் வைத்த பேனரில் தி.மு.க. பிரமுகர்களின் படங்கள்
தேனி அருகே அ.தி.மு.க.வினர் வைத்த பேனரில் தி.மு.க. பிரமுகர்களின் படங்கள் இடம்பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அல்லிநகரம்,
அ.தி.மு.க.வின் 2 அணிகளும் சமீபத்தில் இணைந்தன. இதற்கு வாழ்த்து தெரிவித்து, பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பேனர்கள் வைத்துள்ளனர். அதன்படி துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில், அ.தி.மு.க. கிளை சார்பில் வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி–துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கைகுலுக்குவது போன்ற படம் இடம் பெற்றிருந்தது.
தர்மயுத்தம் வென்றது என்ற வாசகமும் பேனரில் இருந்தது. பேனரின் கீழ்ப்பகுதியில், பள்ளப்பட்டி கிளை பொறுப்பாளர்கள் என்று குறிப்பிட்டு சிலரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் தி.மு.க. பிரமுகர்களின் படங்கள் இருந்தன. இதனைக்கண்ட தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து பேனரில் இருந்த தங்களது புகைப்படங்களை தி.மு.க.வினர் அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது தலைமையில் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போலீசார் பேனரை அகற்றினர்.