சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சதுர்த்தியையொட்டி தஞ்சையில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2017-08-25 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி மற்றும் விஸ்வரூப விநாயகர்சதுர்த்தி விழாக்குழு சார்பில் தஞ்சை பழைய பஸ் நிலையம், வண்டிப்பேட்டை, சின்னஆஸ்பத்திரிரோடு, நேரு சதுக்கம், வண்டிக்காரத்தெரு, மோத்திரப்பசாவடி, சிவகங்கைபூங்கா, சீனிவாசபுரம், பில்லுக்காரத்தெரு, கோரிகுளம், கொள்ளுப்பேட்டைதெரு உள்பட 51 இடங்களில் 3 அடி முதல் 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டன.

தஞ்சை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தஞ்சை ரெயிலடிக்கு எடுத்துவரப்பட்டு பின்னர் அங்கிருந்து காந்திசாலை, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கொடிமரத்துமூலை வழியாக ஊர்வலமாக கரந்தையில் உள்ள வடவாற்றுக்கு எடுத்து செல்லப்படும். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டதையொட்டி சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சதுர்த்தியையொட்டி தஞ்சை கீழவாசலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோவில், தஞ்சை திலகர் திடல் அருகே உள்ள தொப்புள்பிள்ளையார் கோவில், மானம்புச்சாவடியில் உள்ள மும்மூர்த்தி விநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் உள்ள விநாயகருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன.
இலங்கை எம்.பி.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இலங்கை மட்டக்களப்பு எம்.பி. சீனிதம்பி யோகேஸ்வரன் தஞ்சைக்கு நேற்று வந்தார். அவருக்கு இந்து இளைஞர் எழுச்சி பேரவை தலைவர் பழ.சந்தோஷ்குமார், சிவசேனா கட்சி மாநில நிர்வாகி கணேஷ்பாபு ஆகியோர் தலைமையில் பேரவை செயலாளர் செல்வசரவணன்,
ஒருங்கிணைப்பாளர் ராஜாகனி மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மானோஜிப்பட்டி, ஆபிரகாம்பண்டிதர் சாலை ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு பூஜையை சீனிதம்பி யோகேஸ்வரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கீழவாசலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்