மனைவி தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் சாவு

அடகு வைத்த நகையை மீட்டு தராததால் ஆத்திரம் அடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்தார்.;

Update: 2017-08-24 23:30 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி தேவகி (35). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் யஷ்வந்த் என்ற மகன் உள்ளான்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப செலவுக்கு வாங்கிய கடனை அடைப்பதற்காக கருணாகரன், தனது மனைவியின் நகைகளை அடகு வைத்தார். அந்த நகையை மீட்டு தரும்படி தேவகி, தனது கணவரிடம் கேட்டு வந்தார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தேவகி, அடகு வைத்த தனது நகைகளை மீட்டு தரும்படி கணவரிடம் கேட்டார். அதற்கு அவர், தற்போது நகையை திருப்ப முடியாது. பின்னர் மீட்டு தருகிறேன் என்று மனைவியை சமாதானம் செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தேவகி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருணாகரன், மனைவியை காப்பாற்ற முயன்றார்.

அப்போது வலி தாங்க முடியாமல் தேவகி, கணவரை கட்டிப்பிடித்தார். இதில் கருணாகரன் உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது. உடலில் எரிந்த தீயுடன் இருவரும் தெருவுக்கு ஓடி வந்தனர்.

அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரின் உடல்களில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த கணவன்–மனைவி இருவரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை தேவகியும், அவரை தொடர்ந்து கருணாகரனும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி புழல் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். தேவகிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி அம்பத்தூர் ஆர்.டி.ஓ. அரவிந்தன் விசாரித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் தாய்–தந்தையை இழந்து அவர்களின் மகன் யஷ்வந்த் அனாதையாக நிற்பதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.

மேலும் செய்திகள்