அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகளுக்கு தீ: மருந்து பாட்டில்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் மருந்து பாட்டில்கள் வெடித்து சிதறியது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.

Update: 2017-08-22 22:45 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனையில் அவசர சிகிச்சை, பிரசவ வார்டு, தொழு நோயாளிகள், கண், காது, மூக்கு, சித்தா, ஆயுர்வேதம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளது.

தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மருத்துவமனையில் பிணக்கிடங்கு அருகே தொழுநோயாளி பிரிவு உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டிடத்திற்கு பின்புறம் ராட்சத மரம் உள்ளது. மரத்தின் அருகே மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகளை போட்டு தீ வைத்து கொளுத்துகின்றனர்.

மருத்துவ கழிவுகளில் மருந்து பாட்டில்கள், மாத்திரை கவர்கள் கிடந்தது. வெப்பத்தின் காரணமாக மருந்து பாட்டில்கள் டமார், டமார் என்று வெடித்து சிதறியது.

சிதறிய கண்ணாடி துண்டுகள் அருகில் உள்ள தொழுநோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் கட்டிடத்திற்கு உள்ளே சென்று விழுந்தது. மருந்து பாட்டில்கள் வெடிப்பது தெரியாமல் அடிக்கடி வெடிதான் வெடிக்கிறது என தொழு நோயாளிகள் நினைத்து சத்தம் போட்டனர். பின்னர் தான் அவை மருந்து பாட்டில்கள் என்பது தெரிய வந்தது.

நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதியும், மனஉளைச்சலும் ஏற்படும் வகையில் மருந்து பாட்டில்களை தீ வைத்து கொளுத்தும் சம்பவம் மருத்துவமனையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

மருத்துவ நிர்வாகம் மருத்துவ கழிவுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்து அதை நோயாளிகளுக்கு இடையூறு இல்லாமல் பத்திரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் செய்திகள்