கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

கரும்புக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி திருக்கனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை கிளை அலுவலகத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Update: 2017-08-21 23:30 GMT

திருக்கனூர்,

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது இந்த ஆலையில் கடந்த 2016–2017–ம் ஆண்டில் விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. கரும்பு வழங்கியதற்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகையை உடனே வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருக்கனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள், கரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகள் நேற்றுக்காலை திருக்கனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கிளை அலுவலகத்துக்கு கரும்புடன் திரண்டு சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவை தொகையை உடனே வழங்கக்கோரி அவர்கள் கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள். மேலும் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் தங்களுக்கு வர வேண்டிய கரும்பு நிலுவை தொகையை பட்டுவாடா செய்ய வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

அதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கரும்புக்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குவது குறித்து சர்க்கரை ஆலையின் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்