விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சியினர் பங்கேற்பு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.

Update: 2017-08-16 22:45 GMT
தர்மபுரி,

இயற்கை நீர்வளப்பாதுகாப்பு இயக்கம் மற்றும் தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணைசெயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் ரவி வரவேற்று பேசினார்.

கோரிக்கைகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் பெற்ற கூட்டுறவு மற்றும் தேசிய வங்கி பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழு வளர்ச்சி நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் என்னேகொல்புதூர் கால்வாய்த்திட்டம் உள்பட புதிய நீர்பாசன திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக விவசாயிகளின் நலன்கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய நதிகள் இணைப்பு, தென்னக நதிகள் இணைப்பு குறித்து ஆய்வு நடத்தி அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். வறட்சியினால் பாதிக்கப்பட்டு இறந்துபோன விவசாயிகளின் குடும்பங்களுக்கு முழு நிவாரண உதவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோ.வி.சிற்றரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாநில நிர்வாகி நந்தன்,

திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிவாஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் தவமணி, மாநில பொருளாளர் ஜெயலட்சுமி பாலு, மாவட்ட செயலாளர் முனிரத்னம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் நிஜாமுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுபேதார், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்