திருமங்கலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருமங்கலத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2017-08-16 22:45 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் தேவர் சிலை அருகே தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் மூர்த்தி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயராம், தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் மோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இன்குலாப், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், லதா அதியமான் உள்பட தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கட்சியினர், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கையில் கரும்பு தோகையுடன் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

 விவசாயிகளின் எந்த கோரிக்கையும் மாநில, மத்திய அரசுகள் ஏற்காததால் நீதிகேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. வரலாறு காணாத வறட்சியால், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய கோரியும் நாடாளுமன்றமும், சட்டமன்றமும் ஏற்கவில்லை. காவிரி, பெரியாறு பிரச்சினையிலும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டில் மக்களின் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. பலவீனமான தமிழக அரசை, மோடி அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

 பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

 தமிழகத்தில் ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்