அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2017-08-16 22:45 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) சம்பத் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் துணை ஆணையர் தனவேல், அலுவலக ஊழியர்கள் மற்றும் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் நன்றி கூறினார்.

இதேபோல் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தேசிய கொடியை ஏற்றினார். தா.பழூர் அரசு மருத்துவ மனையில் வட்டார தலைமை மருத்துவ அதிகாரி தட்சிணாமூர்த்தி தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமையாசிரியர் பிளமன்ட்ராஜ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

உடையார்பாளையம்

உடையார்பாளையம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஹரி சுந்தர்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உதவி ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கான பேச்சுபோட்டி, ஒப்புவித்தல் போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பள்ளி மேலாண்மை குழுதலைவர் கவிதா பரிசுகள் வழங்கினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆண்டிமடம்

ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் துணை வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா, தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

ஆண்டிமடம்-விளந்தை அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலர் தங்கராசு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளம் பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அப்துல் கலாம் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் அனைத்து மாணவிகளுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப் பட்டன.

இதேபோல் சாலக்கரை- பொன்னாங்கனிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தாவடநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப் பட்டது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தேசிய கொடியினை ஏற்றி வைத்து பேசினார்.

பாடாலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமையாசிரியர் கீதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ராதிகா, அரிமா சங்கத் தலைவர் ஞானசேகரன் உள்பட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கூடலூர் அரசு உயர்நிலை பள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் ராஜேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பேச்சுபோட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தலைமையாசிரியர் ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பிச்சைப்பிள்ளை பரிசுகள் வழங்கினர்.

மங்களமேடு

லெப்பைக்குடிக்காடு பேருராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செயல் அலுவலர் சின்னசாமி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் கவுன்சிலர்கள், பொதுமக்கள் இணைந்து மழைநீரை சேகரிக்கவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும், குப்பைகளே இல்லாத நகரை உருவாக்கவும் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு ஜவகர்லால், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஞான சேகரும் தேசிய கொடியேற்றினர். லெப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. லெப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சேசு கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். 

மேலும் செய்திகள்