ஆம்பூரில் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர் பலி: பெண் டாக்டர் பணியிட மாற்றம்

ஆம்பூரில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் 2 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து பெண் டாக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2017-08-16 22:15 GMT

ஆம்பூர்,

ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 13–ந் தேதி ஆம்பூர் அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்த சென்னையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 65), சந்தானம் (73) ஆகிய 2 பேரும், இருதய நோயால் பாதிக்கப்பட்ட ராள்ளகொத்தூரை சேர்ந்த 8–ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி (13) ஆகியோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பணி நேரத்தில் சுமார் 2½ மணி நேரம் வரை எந்த டாக்டரும் இல்லாத காரணத்தால் ராஜ்குமார், வைஷ்ணவி ஆகிய 2 பேரும் தகுந்த சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சாந்தி, வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் உஷா, சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் பாரதி ஆகியோர் கொண்ட மூவர் குழு நேற்று முன்தினம் விசாரணை நடத்தியது.

அதைத்தொடர்ந்து மாநில மருத்துவ பணிகள் இயக்குனர் டாக்டர் பானு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

அப்போது சம்பவம் நடந்த அன்று ஆஸ்பத்திரியில் டாக்டர் சங்கீதா என்பவர் பணியில் இருந்ததும், அவர் மதியம் வெளியில் சென்று இருந்ததும், அந்த நேரத்தில் விபத்தில் அடிபட்ட ராஜ்குமார், மாணவி வைஷ்ணவியும் இறந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சங்கீதாவை உடனடியாக ஆம்பூரில் இருந்து அணைக்கட்டு ஆஸ்பத்திரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்