சுதந்திர தினத்தில் விதைப்பந்துகளை வீசிய மாணவ, மாணவிகள்

வானுயர்ந்து நின்ற மரங்கள் எல்லாம் வேருடன் வெட்டி சாய்க்கப்பட்டன. விவசாய விளை நிலங்கள் எல்லாம் வறண்டு பாலை வனமான காட்சி தரும் பரிதாபம்.

Update: 2017-08-16 07:25 GMT
மணப்பாறை,

இருப்பினும் பசுமை நிறைந்த தமிழகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் மணப்பாறை அருகே உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் தயாரித்த 11 ஆயிரத்து 197 விதைப்பந்துகளை சுதந்திர தினத்தையொட்டி நேற்று பள்ளிக்கு எடுத்து வந்திருந்தனர். விதைப் பந்துகள் அதிகம் தயாரித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை தலைமை ஆசிரியர் அகஸ்டின் லூர்து பால்ராஜ் வழங்கினார்.

இதைப் பெற்ற மாணவ, மாணவிகள் முதலில் பள்ளிக்கு எதிரே உள்ள வளாகத்தில் விதைப்பந்துகளை மாணவ, மாணவிகள் தூவினர். பின்னர் மணப்பாறை - மலையடிப்பட்டி சாலையிலும் வீசியதோடு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும் விதைப்பந்துகளை வீசினர்.

முருங்கை, புளியவிதை, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான விதைகளை மாணவ, மாணவிகள் விதை பந்துகளாக தயாரித்து வீசினர். இதுமட்டுமின்றி இனி வரும் காலங்களிலும் இனிபோன்று விதைப்பந்துகளை தயாரித்து அவற்றை தொடர்ந்து பொது இடங்களில் வீசி விரைவில் பசுமை நிறைந்த பகுதியாக மாற்றுவதாக உறுதி பூண்டுள்ளனர்.

நாங்கள் செய்துள்ள விதைப்பந்துகள் வீணாவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் வீசும் விதைப் பந்துகள் முளைத்தால் மரம், முளைக்காவிடில் இந்த மண்ணிற்கு உரம் என்பதால் மகிழ்ச்சியான இந்த பணியை தொடர்கின்றோம் என்று மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்