நீர்நிலைகளை மேம்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்

நீர்நிலைகளை மேம்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில், கலெக்டர் டி.ஜி.வினய் பேசினார்.

Update: 2017-08-15 23:36 GMT

திண்டுக்கல்,

சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பாடி ஊராட்சி குழந்தைபட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இதில் குடிநீர் வினியோகம், டெங்கு தடுப்பு நடவடிக்கை, ரே‌ஷன் பொருள் வினியோகம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் புதிய இந்தியாவை உருவாக்குவோம் எனும் தலைப்பில் கலெக்டர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். அப்போது கலெக்டர் டி.ஜி.வினய் பேசியதாவது:–

கடந்த ஆண்டு திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கமில்லாத கிராமமாக குழந்தைபட்டி அறிவிக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் சரியாக கடைபிடித்து சுகாதாரமான கிராமமாக உருவாக்க வேண்டும். தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு தமிழக அரசால் ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.12 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள 24 கிராமங்களையும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கமில்லாத கிராமமாக மாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்து சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். அதற்கு பயன்படாத டயர், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப், உடைந்த பானை போன்றவற்றை தண்ணீர் தேங்கும் வகையில் திறந்தவெளியில் போடக்கூடாது. அதன் மூலம் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்து, டெங்கு காய்ச்சலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளலாம்.

தற்போது அனைத்து பகுதிகளிலும் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய மாவட்ட நிர்வாகத்தால் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் நீராதாரங்களை பெருக்கும் வகையில், நீர்நிலைகளை மேம்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு மக்கள் துணையாக இருக்க வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு, அதனை பெற்று மக்கள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் டி.ஜி.வினய் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிசாமி, பாண்டியன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேல்முருகன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தருமத்துபட்டி, கே.புதுக்கோட்டை, அம்மாபட்டி ஊராட்சிகளில் நடந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலையான், ஆண்டியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல் ஆடலூர், பன்றிமலை, புதுச்சத்திரம், நீலமலைக்கோட்டை, கோனூர், குட்டத்துப்பட்டி, டி.பண்ணைப்பட்டி, அழகுபட்டி, ஜி.நடுபட்டி, பொன்னிமாந்துரை, கொத்தப்புள்ளி, கசவனம்பட்டி, மாங்கரை, அனுமந்தராயன்கோட்டை, குருநாதநாயக்கனூர், கரிசல்பட்டி, காமாட்சிபுரம், பலக்கனூத்து, டி.புதுப்பட்டி, முருநெல்லிக்கோட்டை ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.

இதற்கு அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் தலைமை தாங்கினர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது பல ஊராட்சிகளில் மக்கள் குடிநீர், தெருவிளக்கு வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். அப்போது நிதி கிடைத்ததும் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் எனறு மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

வத்தலக்குண்டு அருகேயுள்ள சித்தரேவு ஊராட்சியில் ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துராணி தலைமையிலும், சின்னக்கவுண்டன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமை எழுத்தர் இளங்குமரன் தலைமையிலும், அய்யங்கோட்டை ஊராட்சியில் ஒன்றிய மேற்பார்வையாளர் ஸ்டீபன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. கணவாய்பட்டியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வேந்திரன் தலைமையிலும், ஜி.தும்மலப்பட்டியில் முன்னாள் தலைவர் உதயகுமார் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி செயலர் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்