டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு

குடிமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Update: 2017-08-15 23:24 GMT

குடிமங்கலம்,

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூளவாடி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் வசித்து வருகின்றனர். பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள் பள்ளியில் வந்து டாஸ்மாக் கடை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி செல்கின்றனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள், மேல்நிலைப்பள்ளி ஆகியவை டாஸ்மாக் கடையில் இருந்து சிறிது தொலைவிலேயே அமைந்துள்ளது.

மேலும் டாஸ்மாக் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. குடியிருப்பு அருகில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு சண்டையிடுவதும், பெண்களை கேலிசெய்வதும், குடியிருப்பு பகுதிகளை திறந்த வெளி பாராகவும் மாற்றி வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் சுதந்திரதினத்தன்று டாஸ்மாக் கடையால் தங்களின் நடமாடும் உரிமை பாதிக்கப்படுவதாக கூறி கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என முதல்–அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று கிராம மக்கள் தங்களது வீடுகள் மற்றும் அங்குள்ள கடைகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் நேற்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், டாஸ்மாக் கடையை அகற்றும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறினர். இதனைத்தொடர்ந்து டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான கருப்புக்கொடி போராட்டத்தை கிராம மக்கள் தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்