23 அணைக்கட்டுகளை நவீனமயமாக்க ரூ.1,587 கோடி நிதி ஒதுக்கீடு
23 அணைக்கட்டுகளை நவீனமயமாக்க ரூ.1,587 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று சுதந்திர தின உரையில் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசியகொடி ஏற்றி வைத்து முதல்-மந்திரி சித்தராமையா நிகழ்த்திய உரையில் கூறியதாவது:-
‘அன்னபாக்யா திட்டம்‘
கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே பசியில்லா கர்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் அரசு செயல்பட்டு வருகிறது. அனைவராலும் பாராட்டப்பட்ட ‘அன்னபாக்யா‘ திட்டத்தால் மாநிலத்தில் ஒவ்வொரு மாதத்துக்கும் 7 கிலோ அரிசி 4 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் துவரம் பருப்பும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவினாலும் கூட பசியால் இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பது அரசின் இதயத்துடிப்பாக உள்ளது. இதற்காக ‘மத்ரு பூர்ணா யோஜனா‘ திட்டத்தின் மூலம் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டமானது மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவில் (வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் அனைத்து அங்கன்வாடிகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.
பெங்களூருவில் முதற்கட்டமாக நாளை (அதாவது இன்று) 101 இந்திரா மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படுகின்றன. இதன்மூலம் கூலித்தொழிலாளர்கள், ஏழை மக்கள் பயன் அடைவார்கள். விரைவில், பெங்களூருவில் உள்ள 198 வார்டுகளிலும் இந்திரா மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும்.
இலவச மடிக்கணினிகள்
மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்கான கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். அங்கன்வாடி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பால் மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. அங்கன்வாடி செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக வாரத்தில் 2 நாட்கள் முட்டைகள் வழங்கப்படுகிறது. 62.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்களும், 47.50 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக சீரூடைகள், ஷூக்கள் மற்றும் ஷூக்கான காலுறைகள் வழங்கப்படுகின்றன. 5 லட்சம் பேருக்கு இலவசமாக சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளது. ‘வித்யாஸ்ரீ‘ திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 2.70 லட்சம் மாணவர்களுக்கு ரூ.319 கோடி செலவு செய்யப்படுகிறது.
‘கவுசல்யா கர்நாடகா‘ திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மருத்துவம், என்ஜினீயரிங், டிப்ளமோ ஆகிய படிப்புகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 1.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. டாக்டர் அம்பேத்காரின் 125-வது பிறந்தநாளில் பெங்களூருவில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பொருளாதார பள்ளி தொடங்கப்பட்டது. ஐதராபாத்-கர்நாடக பகுதிகளில் மேற்படிப்புகளை மேம்படுத்த ராய்ச்சூரில் புதிதாக பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறுபான்மையின மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பது பெருமைப்பட கூடிய விஷயம்.
விவசாயத்துக்கு முக்கியத்துவம்
மாநிலத்தில் இலவசமாக மண்எண்ணெய் வழங்குவது மற்றும் சமையல் கியாஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாநில வருவாயில் அதிகளவு நிதியை விவசாயத்துக்கு ஒதுக்கி வருகிறேன். இதற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டும் விதிவிலக்கு அல்ல.
நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 1.6 லட்சத்துக்கும் அதிகமான விவசாய குளங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டில் முதல் முறையாக ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன், ரூ.10 லட்சம் வரை 3 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 457 விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரத்து 10 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 70 ஆயிரம் விவசாயிகளுக்கான ரூ.2 ஆயிரத்து 359 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 20-6-2017-ல் இருந்து கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாயிகளின் கடன்களில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் 22 ஆயிரத்து 27 ஆயிரத்து 506 விவசாயிகளுக்கான ரூ.8,165 கோடி கடன் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
அணைக்கட்டுகளை நவீனமயமாக்க...
கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ‘வை-பை‘ வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என கூறினேன். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 2,500 கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவசமாக ‘வை-பை‘ வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. மீதமுள்ள 3,500 கிராம பஞ்சாயத்துகளுக்கு 2018-ம் ஆண்டில் இலவச ‘வை-பை‘ வசதி ஏற்படுத்தப்படும்.
ரூ.12 ஆயிரத்து 340 கோடிக்கு பத்ரா மேலணை திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சிக்கமகளூரு, துமகூரு, சித்ரதுர்கா மற்றும் தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 248 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும், 367 குளங்களுக்கும் தண்ணீர் நிரப்பப்படும். எத்தினஒலே மற்றும் பத்ரா மேலணை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற விரைவில் தனி வாரியம் அமைக்கப்படுகிறது.
காவிரி படுகையில் உள்ள பழமை வாய்ந்த 23 அணைக்கட்டுகளை நவீனமயமாக்க ரூ.1,587.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 13 பணிகள் முடிவடைந்து உள்ளன. 33 கால்வாய்களை புனரமைக்கும் பணியில் 8 பணிகள் ரூ.810.21 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ளன. 11 பணிகள் ரூ.813.52 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.