ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் பிடிபட்டனர்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

Update: 2017-08-15 23:18 GMT
மங்களூரு, 

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சஜிபமுன்னூரு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத் மடிவாளா. ஆர்.எஸ்.எஸ். பிரமுகர். கடந்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி இவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தால் பண்ட்வால் உள்பட தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் கத்திக்குத்து சம்பவங்களும், கொலை சம்பவங்களும் நடந்தன. இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை குறிவைத்து நடத்தப்படுவதாக பா.ஜனதா குற்றம்சாட்டியது. மேலும் இதைக்கண்டித்தும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பா.ஜனதா சார்பில் மங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

2 பேர் கைது

இதற்கிடையே சரத் மடிவாளா கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சாம்ராஜ்நகர், பெங்களூரு, மும்பை, கேரளா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த கொலை சம்பவத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்பின் தலைவரான கலில் உல்லா என்பவருக்கும், அவரது கூட்டாளி அப்துல் ஷபிக்கும் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு சென்று அங்கு உறவினர் வீடுகளில் பதுங்கி இருந்த கலில் உல்லா மற்றும் அப்துல் ஷபி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை கர்நாடக மாநில மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்