ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் 6 பேர் கைது மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
விஜயாப்புராவில், கோர்ட்டு வளாகத்தில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.;
பெங்களூரு,
‘பீமாபுரா கொலையாளி‘ என அழைக்கப்படுபவர் பாகப்பா ஹரிஜான் (வயது 40). ரவுடியான இவர் மீது விஜயாப்புரா, கலபுரகி, மராட்டியத்தின் சில பகுதிகளில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. குற்ற வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்த பாகப்பா ஹரிஜான் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில், உறவினர் ஒருவரை பாகப்பா ஹரிஜான் கொலை செய்த வழக்கு ஒன்று விஜயாப்புரா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக வேண்டி கடந்த 8-ந் தேதி காலையில் அவர் கோர்ட்டுக்கு வந்தார்.
அப்போது, அங்கு நின்ற மர்மநபர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்து சென்றுவிட்டார். இதில் 4 குண்டுகள் அவருடைய உடலில் பாய்ந்தன. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு விஜயாப்புரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
6 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் ஜலாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாகப்பா ஹரிஜானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில், பாகப்பா ஹரிஜானை சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
விசாரணையில், அவர்களின் பெயர்கள் ரமேஷ் (வயது 46), பீமஸ்யா (36), நாமதேவா தொட்டமணி (50), பிரபு (48), ரசாக் காம்ப்ளி (40), மல்லேஷ் (48) என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்பு கொண்டு தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.