2025–ம் ஆண்டுக்குள் என்.எல்.சி.யின் மின் உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்தப்படும்

என்.எல்.சி.யில் 2025–ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிறுவனமாக உயர்த்த திட்டமிடப்பட்டு இருப்பதாக சுதந்திர தினவிழாவில் சரத்குமார் ஆச்சார்யா பேசினார்.

Update: 2017-08-15 23:15 GMT

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் நகர நிர்வாக அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு நிறுவன தலைவர் சரத்குமார் ஆச்சார்யா மாலை அணிவித்தார். இதை தொடர்ந்து பாரதி விளையாட்டு அரங்கில், தேசிய கொடியை சரத்குமார் ஆச்சார்யா ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் என்.எல்.சி. இந்தியா நிறுவன பாதுகாப்பு படை, தீயணைப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டுநலப் பணித்திட்ட மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து சரத்குமார் ஆச்சார்யா பேசியதாவது:–

என்.எல்.சி. நிறுவனம் தனது வளர்ச்சிக்காக செயல் படுத்தி வரும் புதிய திட்டங்கள, வடிவம் பெற்று படிப்படியாக செயல் படுத்தப்பட்டு வருகின்றன. 2,025–ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாக உயர்வதுடன், அதற்குத் தேவையான எரி பொருட்களை வழங்கும் சுய சார்புமிக்க நிறுவனமாக திகழும்.

இந்நிறுவனம் நன்னெறிக் கோட்பாடுகள் மூலம் வழி நடத்தப்பட்டு வரும் ஒரு சமூக பொறுப்புணர்வு மிக்க நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் அருகில் உள்ள கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள், ஏராளமான விவசாய நிலங்களுக்கு நீர்பாசன வசதி, சுற்றுச்சூழலையும், பல்லுயிர் பெருக்கத்தினையும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. அடுத்தக்கட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி, நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் புதிய முயற்சிகளையும் செய்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத போக்குவரத்து வசதியினை, நெய்வேலி நகரில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறும் வகையில், பல்வேறு முயற்சிகள் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைந்து சுரங்க பொறியியல் துறையில் பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் உயர்கல்வி பயில ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து வர்த்தக மேலாண்மை துறையில் எம்.பி.ஏ. முதுகலை பட்டப்படிப்பு இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது.

நெய்வேலி கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் பகுதி நேர படிப்பாக நடத்தப்படவிருக்கும் இந்த முதுகலை படிப்பை படிப்பதற்கு இன்று முதல்(அதாவது நேற்று) இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வகுப்புகள் வருகிற 28–ந்தேதி முதல் தொடங்க உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், நிறுவனத்தில் நீண்ட நாள் சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், நிறுவன நலனுக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர்கள், பாதுகாப்பு, கண்காணிப்பு, விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாறி ஒருவருக்கு நலத்திட்ட உதவியும் வழங்கபட்டது.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் இயக்குனர்கள் ராக்கேஷ் குமார், சுபீர்தாஸ், வி.தங்கபாண்டியன், பி.செல்வக்குமார். ஆர், விக்ரமன், கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி டி. வெங்கடசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதரவற்றோர் நலன் கருதி நெய்வேலி நகரில் 6–வது வட்டத்தில் ஆனந்தம் என்கிற முதியோர் இல்லத்தை சரத்குமார் ஆச்சார்யா திறந்து வைத்தார். இங்கு தங்குபவர்களுக்கு உணவு, உறைவிடம் உள்பட அனைத்தும் என்.எல்.சி. நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. தொடர்ந்து நெய்வேலியில் உள்ள கோவில்களில் கூட்டுவழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெற்றன.

மேலும் செய்திகள்