சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு சாஸ்திர சட்ட எரிப்பு போராட்டம்
சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு சாஸ்திர சட்ட எரிப்பு போராட்டம் 215 பேர் கைது
சங்கராபுரம்,
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் சேஷசமுத்திரம் காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி அமைதி திரும்ப கோரி சங்கராபுரம் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு சாஸ்திர சட்ட எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அம்பிகாபதி, சிலம்பன், திராவிடசந்திரன், இளங்கோ, கிள்ளிவளவன், ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலித்சந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்று அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து தேசிய கொடியை ஏற்றினர். பின்னர் சேஷசமுத்திரம் காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப கோரி மனுசாஸ்திர சட்ட நோட்டீசை எரித்தனர்.
இதுபற்றி அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜாகுமார், ரத்தினசபாபதி, ஜெயவேல். சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 215 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.