பொள்ளாச்சி ஒன்றியத்தில் வறுமையே இல்லாத ஊராட்சிகளாக மாற்ற அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்

பொள்ளாச்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளை வறுமையே இல்லாத ஊராட்சிகளாக மாற்ற அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Update: 2017-08-15 22:30 GMT
பொள்ளாச்சி,

சுதந்திர தினத்தையொட்டி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொசுக்கள் உற்பத்தியை தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் தமிழகத்தில் 1000 கிராம ஊராட்சிகளை வறுமையே இல்லாத ஊராட்சிகளாக மாற்றிட அந்தியோதயா இயக்கம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு அரசோடு ஒத்துழைத்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தீர்மானிக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்து போராடும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அரசு ரூ.1 லட்சம் வீதம் 5 மகளிர் சுயஉதவிக்குழுகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதை மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தகவல் தெரிவித்து கருத்து கேட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாக்கினாம்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், சந்திரகுமார் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் பெருமாள்சாமி, ஊராட்சி செயலாளர் சுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட 34 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மந்திரவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) முரளி மோகன் தம்பி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய ஆணையாளர் சம்பத்குமார் அந்தந்த கிராமங்களுக்கு சென்று மேற்பார்வையிட்டார். இதில் ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 19 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் வினிதா மேற்பார்வையிட்டர். இதில் ஒன்றிய, ஊராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் ஷீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனிதா, சாய்ராஜ், சுகந்தி மற்றும் ஒன்றிய, ஊராட்சியை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். பொள்ளாச்சி பகுதியில் மட்டும் 138 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்