வால்பாறையில் தொடர்ந்து அட்டகாசம்: சி.எஸ்.ஐ.ஆலய சுற்றுச்சுவர், குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்திய காட்டுயானை
வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் காட்டுயானை புகுந்து நர்சுகள் குடியிருப்பையும், தேவாலய சுற்றுச்சுவரையும் உடைத்து அட்டகாசம் செய்தது.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக ஒரு காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது. அங்குள்ள வெள்ளமலை சோலைப்பாடி எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்துவரும் அந்த காட்டுயானை தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்புக்குள் புகுந்து வாழை மரங்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த காட்டுயானை பாதுகாப்பு பணிக்கு சென்ற வனத்துறையின் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வனத்துறையினர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அந்த காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதே போல புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் காட்டுயானையும், சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் ஒரு காட்டுயானையும் முகாமிட்டுள்ளன. இது தவிர தலநார் எஸ்டேட் வனப்பகுதியிலும் பட்ட பகலில் ஒரு ஆண்காட்டுயானை முகாமிட்டு சுற்றித் திரிந்து வருகிறது.
வெள்ளமலை எஸ்டேட் சோலைப்பாடி பகுதியில் முகாமிட்டிருந்த ஒரு காட்டுயானை நேற்று முன்தினம் இரவு கருமலை எஸ்டேட் பகுதிக்குள் புகுந்தது. அந்த நேரத்தில் வால்பாறையில் இருந்து அக்காமலை மற்றும் வெள்ளமலை டாப் எஸ்டேட் பகுதிகளுக்கு சென்ற அரசு பஸ்சை வழிமறித்தது. பின்னர் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானையை விரட்டினர். இதனை தொடர்ந்து அந்த யானை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று நின்று கொண்டது. அதன் பின்னர் பஸ்சுகள் எஸ்டேட் பகுதிக்கு சென்றது.
பின்னர் அந்த காட்டுயானை அங்குள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தின் சுற்றுச் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் தொடர்ந்து வாகனத்தில் சைரனை ஒலிக்கச் செய்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் திடீரென்று அந்த யானை கருமலை எஸ்டேட் ஆஸ்பத்திரி நர்சுகள் குடியிருப்புக்குள் புகுந்து சுஜா, ஜெபா, நிஷா ஆகிய நர்சுகளின் குடியிருப்பிலிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு ஜன்னலையும் உடைத்து சேதப்படுத்தியது.
பின்னர் கருமலை எஸ்டேட் சூடக்காடு பகுதிக்குள் போனது. தொடர்ந்து வால்பாறை வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத காட்டுயானைகளின் அட்டகாசம் தொடர்வதால், கருமலை, ஊசிமலை, வெள்ளமலை ஆகிய எஸ்டேட் பகுதி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் நிரந்தரமாக அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எஸ்டேட் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.