வைத்திரி அருகே 15 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தைப்புலி உயிருடன் மீட்பு

வைத்திரி அருகே 15 அடி அழ கிணற்றில் ஆண் சிறுத்தைப்புலி தவறி விழுந்தது. இதை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Update: 2017-08-15 22:15 GMT

கூடலூர்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி அருகே 6–வது மைல் கிராமத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் கிராம மக்கள், விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள வளர்ப்பு பிராணிகள் திடீரென காணாமல் போனது. இதனால் சிறுத்தைப்புலி பிடித்து சென்றிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அனிபா என்பவர் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கு சொந்தமான குடிநீர் கிணற்றின் மீது மூடி வைத்திருந்த பிளாஸ்டிக் வலை காணாமல் போனதை கண்டார். இதனால் கிணறு அருகே அனிபா சென்று பார்த்தார். அப்போது சுமார் 15 அடி ஆழ கிணற்றின் உள்ளே சிறுத்தைப்புலி ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்தார்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் உதவி வன பாதுகாவலர் சரவன்குமார் வர்மா, வனச்சரகர் ரஞ்சித்குமார், கல்பட்டா தீயணைப்பு படை வீரர்கள், டாக்டர் அருண் சக்கரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் வைத்திரி போலீசாரும் வந்தனர். பின்னர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தைப்புலியை பிடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கிணற்றின் உள்ளே சிறுத்தைப்புலி இருப்பதால் மயக்க ஊசி செலுத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே கிணற்றுக்குள் சிறுத்தைப்புலி கிடக்கின்ற தகவல் காட்டு தீயாக பரவியது. இதனால் பொதுமக்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்களை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் யாரும் செல்ல வில்லை. இதனால் பொதுமக்களை விரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பின்னர் கிணற்றின் உள்ளே இறைச்சி துண்டு வைக்கப்பட்ட கூண்டு இறக்கப்பட்டது. இதை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு கிணற்றுக்குள் இறக்கப்பட்ட கூண்டுக்குள் சிறுத்தைப்புலி சென்றது. அந்த சிறுத்தைப்புலி 5 வயதான ஆண் சிறுத்தைப்புலி என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் கிணற்றில் இருந்து கூண்டு வேகமாக எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் வாகனத்தில் கூண்டு ஏற்றப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வனத்துறையினர் கூண்டை திறந்து விட்டனர். பின்னர் கூண்டுக்குள் அடைப்பட்டு இருந்த சிறுத்தை புலி வேகமாக வெளியேறி வனப்பகுதிக்குள் ஓடி தலைமறைவானது. அதன் பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் பல மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்