மோட்டார் சைக்கிளில் சென்றபோது பஸ் மோதி நெசவு தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிளில் சென்றபோது பஸ் மோதி நெசவு தொழிலாளி இறந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

Update: 2017-08-15 21:31 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா, ராஜா நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி (வயது 43), நெசவு தொழிலாளி. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, சிறுவன் விஷ்ணு (7) ஆகியோருடன் திருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்துக்கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று காலை புறப்பட்டார்

திருத்தணி அருகே குமாரகுப்பம் என்ற இடத்தில் சென்றபோது, ஒரு தனியார் பஸ் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துளசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற சுப்பிரமணி, சிறுவன் விஷ்ணு காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறைபிடித்தனர்

இந்த நிலையில் ராஜா நகரம் கிராமத்தில், விபத்தை ஏற்படுத்திய அந்த தனியார் பஸ்சை நேற்று இரவு 8 மணிக்கு அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்