டெங்கு காய்ச்சலுக்கு 6-ம் வகுப்பு மாணவி பலி ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 6-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2017-08-15 23:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கனககிரி ஊராட்சி மரப்பிரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி மல்லிகா. இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவர்களுக்கு ஜீவிதா (வயது 11) என்ற மகள் இருந்தாள். இவள் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இதனிடையே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜீவிதாவை கடந்த 8-ந் தேதி சிகிச்சைகாக அவருடைய பெற்றோர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜீவிதா பரிதாபமாக இறந்தாள். அவளது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும், ஜீவிதாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக முன்பே கூறி இருந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றிருப்போம் என்று கூறியும் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைதொடர்ந்து ஜீவிதாவின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்