திருவேற்காடு கோவிலில் பொதுவிருந்து: அ.தி.மு.க. இரு அணி நிர்வாகிகள் நீண்ட நேரம் ஆலோசனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கோவிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் பங்கேற்ற அ.தி.மு.க. இரு அணி நிர்வாகிகள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.
பூந்தமல்லி,
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. (அம்மா) அணியை சேர்ந்த அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், பென்ஜமின், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்த பாண்டியராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஒன்றாக சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொது விருந்து நிகழ்ச்சியில் பொதுமக்களோடு அமர்ந்து மதிய உணவு உண்டனர்.
அதைத் தொடர்ந்து இரு அணி நிர்வாகிகளும் கோவில் அலுவலக வளாகத்தில் உள்ள அறைக்குள் சென்று இணைப்பு குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு வெளியே வந்த அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி அளிக்காமல் சென்று விட்டார். பின்னர் வந்த க.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
புராதன நகரம்
மத்திய அரசிடம் இருந்து 3 வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் முயற்சியால் காஞ்சீபுரம், வேளாங்கண்ணிக்கு புராதன நகரம் கிடைக்கப்பெற்றது. அதேபோல ஆவடி தொகுதியில் உள்ள திருவேற்காடு நகராட்சியை புராதன நகரம் என பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
அதேபோல் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு அருகில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆன்மிக அறிவியல் கலாசார மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அயனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திருவேற்காடு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அடுத்த கட்டம்
அணிகள் இணைப்பு ஆக வேண்டும் என்று விரும்புகிறோம். பாதி தூரம் வந்து விட்டார்கள். இன்னும் பாதி தடையாக இருப்பது ஜெயலலிதா இறப்பில் நீதி விசாரணை. அது துறை சார்ந்த நீதி விசாரணையா? ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணையா? சி.பி.ஐ. விசாரணையா? என்ற பல படிநிலைகள் உள்ளன. இதில் எந்த படிநிலை என்ற முடிவை தெரிவித்தாலே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.
நாங்கள் எந்த குறிக்கோளுக்காக தர்மயுத்தம் ஆரம்பித்தோமோ, அது நிறைவேறும் வகையில் இணைப்பு இருக்க வேண்டும். தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று நம்புகிறோம்.
இணைப்பு சாத்தியம்
டி.டி.வி.தினகரன் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட 20 எம்.எல்.ஏக்களில் 13 பேர், சுதந்திர தினவிழாவுக்கு வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் பேசியவர்கள் ஆட்சி கலைய காரணமாக இருக்க மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இரு அணிகளின் இணைப்பு சாத்தியப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.