தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் வெங்கடேஷ் தேசிய கொடியேற்றினார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேற்று காலை தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 36 ஆயிரத்து 359 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2017-08-15 23:00 GMT
தூத்துக்குடி,

நாடு முழுவதும் சுதந்திரதினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் காலை 8.32 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்துக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் வரவேற்றார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் 8.35 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

தொடர்ந்து விழா மேடை அருகில் அமர்ந்து இருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கலெக்டர் வெங்கடேஷ் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோன்று பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 48 பேருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம், மகளிர் திட்டம் மூலம் ரூ.70 லட்சத்து 90 ஆயிரம், மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.6 லட்சம், தாட்கோ மூலம் ரூ.11 லடசத்து 14 ஆயிரத்து 459 உள்பட 9 துறைகள் மூலம் 77 பேருக்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 36 ஆயிரத்து 359-க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் தூத்துக்குடி ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி புனிதபவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் சிறப்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்திய விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோசலின்சாந்தி உள்ளிட்ட தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கேடயம் பரிசு வழங்கினார்.

விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கந்தசாமி, ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் பள்ளி

தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திரதின விழாவுக்கு பள்ளி கமிட்டி உறுப்பினர் விஜய்ஆனந்த் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். நிர்வாக சபை உறுப்பினர் அன்புலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை தங்கேசுவரி வரவேற்று பேசினார். விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் தட்சணமாற நாடார் சங்க உறுப்பினர்கள் மாரியப்பன், ஜெயதுரை மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை இந்திரா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மாரியம்மாள், துணை முதல்வர் வாசுகி ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்