ராமேசுவரம்–சென்னை இடையே அப்துல் கலாம் பெயரில் ரெயில் இயக்க கோரிக்கை
ராமேசுவரம்–சென்னை இடையே அப்துல் கலாம் பெயரில் ரெயில் இயக்க வேண்டும் என்று முன்னாள் ஊராட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பனைக்குளம்,
சக்கரக்கோட்டை ஊராட்சி வாணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் சக்கரக்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் நூர்முகமது கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு வாணி முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹாஜா நஜ்முதீன் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி வரவேற்று பேசினார். வாணி பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் பேசியதாவது:– சுதந்திரதினத்தன்று மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தியாகிகளை நினைவுகூற வேண்டும். அனைத்து வளமும் கொண்ட நாடாக நமது இந்தியா திகழ்கிறது. மாணவ–மாணவிகள் நமது மண்ணின் மைந்தர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காட்டிய வழியில் சென்றால் இந்தியாவின் பெயரை சர்வதேச அளவில் ஒளிர செய்ய முடியும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் ராமேசுவரம்–சென்னை இடையே புதிய ரெயில் இயக்க வேண்டும். இந்த கோரிக்கையை மத்திய–மாநில அரசுகள் உடனே செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், கட்டுரை, கவிதை, மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி மாணவிகளுக்கு நினைவு பரிசுளை வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முருகேசன், ஐனுல் ஜாரியா, வசந்தி மற்றும் ஆசிரிய–ஆசிரியைகள் செய்திருந்தனர்.