காக்கிச்சட்டையை கவர்ந்திழுத்த கதராடை கம்பம் பீர்முகம்மது பாவலர்

தமிழ்நாட்டின் வளமான பகுதிகளில் ஒன்றாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய சுதந்திரத்திற்காக காக்கி சட்டையை தூக்கி எறிந்த பாவலரால் இப்பகுதிக்கு மகாத்மா காந்தி கால்பதித்துள்ள பெருமையும் உண்டு.

Update: 2017-08-15 07:45 GMT
அப்போதைய மதுரை மாவட்டத்தின் மேற்கு பகுதியான கம்பம் பள்ளத்தாக்குப்பகுதி விடுதலை போராட்டத்தில் முன்னணியில் நின்றது. ஏ.எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், நாராயணசாமி பாரதி, திம்மையகவுர் போன்ற சிறந்த தேசபக்தர்களின் தலைமையில் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு நடந்தது. பற்றி எரிந்த இந்தத்தீக்கு நெய்வார்த்தது போல வந்து சேர்ந்தவர் கம்பம் பீர்முகம்மது பாவலர். கம்பம் நகரில் சிறந்த கல்வி பெற்ற பீர்முகம்மது இயல்பாகவே கவிதை இயற்றுவதிலும், பேச்சாற்றலிலும் வல்லவராக இருந்தார். கவிதை கனல் தெறிக்கும் அந்த கவிஞரை, காக்கிச்சட்டையை அணிந்து பணிபுரிய வருமாறு ஆங்கில அரசு அழைத்தது.

தன்மானமும், உரிமைவேட்கையும் மிகுந்த பீர்முகம்மது பாவலருக்கு சார்பு ஆய்வாளர் பணி என்பது எட்டிக்காயாக கசந்தது. அடிமை இந்தியாவில் காவல் துறை சார்பு ஆய்வாளர் பணி என்பது மிக மதிப்பிற்குரிய ஒன்றாக அன்று இருந்தது. தலையாரி வேலை கூட தலை சிறந்ததாக போற்றப்பட்ட காலம் அது. அதிகாரம் மிக்க சார்பு ஆய்வாளர் பணி என்பது பெரும் கவுரவத்தின் அடையாளமாக இந்தியர்களால் கருதப்பட்டது. ஆதலால் பெற்றோரும், உறவினர்களும் அவரை காவல்துறை பணியை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினர். பெற்றோரின் உள்ளத்தை புண்படுத்த விரும்பாத பீர்முகம்மது பாவலர் ஆண்டிப்பட்டியில் சார்பு ஆய்வாளராக பொறுப்பேற்றார்.

விடுதலை போராட்டம் வீறுகொண்டு எழுந்திருந்தது. அதன் தாக்கம் பீர்முகம்மதுவிடமும் எதிரொலித்தது. ‘காக்கிச்சட்டையை விட்டு வா’ என கதராடை அவரை கவர்ந்து இழுத்தது. ‘வெள்ளையர்கள் வீசும் வெள்ளிக் காசுக்காக விலை போய், அவர்களுக்கு வெண் சாமரம் வீசுவதா? அல்லது நாட்டு விடுதலைக்காக தியாக வேள்வியில் குதிப்பதா?’ என்ற குழப்பம் அவரை ஆட்டிப்படைத்தது. அந்த குழப்பத்தை தீர்த்து அவரை நல்லதொரு முடிவை எடுக்க வைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

தன்னை எதிர்க்கின்றவர்களை ஒடுக்க ஆங்கில அரசு பலவித சூழ்ச்சிகளை அப்போது கையாண்டு வந்தது. அதில் ஒன்றுதான் கைரேகை சட்டம். அன்றைய பம்பாய் மாநிலத்தின் பண்டாரிகள், குஜராத்தின் பதன்வாடியாக்கள், தமிழகத்தில் பிரமலைக்கள்ளர், கொண்டையங்கோட்டை மறவர், குறவர் போன்ற பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் இரவானதும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து, தங்கள் கைரேகையை பதிவு செய்வதுடன், இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.

ஒருநாள் வரத்தவறினாலும் திருட்டுக்குற்றம் சுமத்தப்பட்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். திருமண நாளன்று கூட இதற்கு விதிவிலக்கு தரப்படுவதில்லை. பகலிலும் வெளியூர் செல்வதற்கு அனுமதி சீட்டு பெற்றுதான் செல்ல வேண்டும். இரவிற்குள் ஊர் திரும்பவேண்டும். இந்த சட்டத்தின் மூலம் பலர் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைக்க பீர்முகம்மது பாவலருக்கு ஆங்கிலேய உயர் அதிகாரி கட்டளையிட்டார்.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தபோது தன் நாட்டவர்கள் மீது, பொய் வழக்குப்போட மறுத்து அவர் தன் பதவியை துச்சமென தூக்கி எறிந்தார். பதவிக்காக தங்கள் காலை தழுவிக்கிடந்த கூட்டத்தை பார்த்திருந்த ஆங்கில அதிகாரிக்கு பீர்முகம்மதுவின் செயல் வியப்பையும், சினத்தையும் ஏற்படுத்தியது.

அந்த சூழலில் சுதந்திர போராட்டத்தில் குதித்தார் பீர்முகம்மது. தன்னுடைய பேச்சாற்றல், கவிதையாற்றல், செயலாற்றல் ஆகிய மூன்றையும் நாட்டின் விடுதலைக்காக பயன்படுத்தினார். “கலெக்டரும் கடவுளல்ல, அடிமை போலீஸ் கான்ஸ்டபிள் எமனுமல்ல” என அவரின் பேனாமுனையிலிருந்து வந்த பாடல் வரிகள், அரசு அதிகாரிகளுக்கு பயந்து கிடந்த மக்களுக்கு துணிவு தந்தது. அவரின் செயல்திறன் அன்னிய ஆடை புறக்கணிப்பு போராட்டத்தில் வெளிப்பட்டது. இந்தியாவிலிருந்து மூலப்பொருள்களை தன் நாட்டிற்கு கொண்டு சென்ற இங்கிலாந்து, அங்கு தன் ஆலைகளில் அவற்றை
பண்டங்களாக மாற்றி, அவற்றை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவந்து கூடுதல் விலைக்கு விற்று கொள்ளையடித்தது. இதையடுத்து இந்திய தொழில்களை காக்க அன்னியத்துணி புறக்கணிப்பு மற்றும் சுதேசி தொழில்களை காக்கும் போராட்டத்தை கையில் எடுத்தனர். இதன்படி துணிக் கடைகள் முன்பு போராட்டம், மறியல், சத்தியாகிரகம் என பல வகைகளில் போராட்டம் நடத்தினர். அதனால் காவல் துறையினரின் தடியடிக்கும், தண்டனைக்கும் ஆளாகினர்.

1923-ம் ஆண்டில் கம்பம் நகரிலும் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. காவல் துறையின் கொடுமைகளும் தொடர்ந்தன. காவல்துறையில் பணியாற்றிய பீர்முகம்மது பாவலருக்கு, அவர்களை தோற்கடிக்கும் விவரம் தெரியாதா? கம்பம் நகர துணிக்கடை வியாபாரிகளை அழைத்து பேசிய பாவலர், அன்னிய துணிகளை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை விளக்கி கூறினார். அவரின் பேச்சு வியாபாரிகளின் மனதை மாற்றியது. அன்னியத்துணிகளை விற்பதில்லை என அவர்கள் ஒட்டுமொத்தமாக சத்தியம் செய்தனர். தன் செயல்திறனால் போராட்டத்தை யாருக்கும் சேதமின்றி வெற்றிகரமாக முடித்தார் பாவலர்.

1934-ம் ஆண்டு காந்தியடிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது உத்தம பாளையம், தேவாரம் பகுதிக்கு காந்தி வருவதாக இருந்தது. கம்பம் நகருக்கும், அருகிலிருக்கும் ஊர்களுக்கும் காந்தியடிகள் வரவேண்டும், அவரது திருவடி தங்கள் மண்ணில் படவேண்டும், அவரது உரையை கேட்க வேண்டும் என மக்கள் விரும்பினர். அதற்காக பீர்முகம்மது பாவலரை அணுகினர். பாவலரும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக காந்தியடிகளின் செயலாளரான மகாதேவ தேசாயை தொடர்பு கொண்டார். ஆனால் காந்தியடிகளின் தமிழக சுற்றுப்பயணம் முன்பே நிச்சயிக்கப்பட்டதால், புதிதாக வேறு இடங்களுக்கு அவர் வர வாய்ப்பில்லை என அவரிடமிருந்து பதில் வந்தது.

இது கம்பம் நகர மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. தன் புத்திக்கூர்மையையும், பேனாவின் கூர்மையையும் பயன்படுத்தி தேசாய்க்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார் பாவலர். அதில் கம்பம் நகர், விடுதலைப்போரில் மிக முக்கியமான இடம் வகிப்பதையும், காந்தியடிகள் அங்கு வருவதால் ஏற்படக்கூடிய எழுச்சியையும் விவரித்து விட்டு காந்தியடிகள் பயணம் மாற்ற முடியாதென்றால், அது கடவுளால் நிச்சயிக்கப்பட்டதா? அல்லது மனிதர்களால் நிச்சயிக்கப்பட்டதா? என எழுதியிருந்தார். அந்த கடிதம் தேசாயியிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காந்தியடிகளிடம் அந்த கடிதத்தை காட்டி, கம்பம் பகுதிக்கு அவர் செல்லும் வகையில் பயண திட்டத்தில் மாறுதல் செய்து அதை தந்தி மூலம் பாவலருக்கு தெரிவித்தார். அதை பார்த்து மனம் மகிழ்ந்த பாவலர், காந்தியடிகளை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளையும் செய்தார்.

காந்தியடிகள் கம்பத்தில் பேசியதோடு, கம்பம் நகரிலேயே இரவு தங்கினார்.

மேலும் செய்திகள்