கடூர் டவுனில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு

கடூர் டவுனில் கார் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த ரூ.5 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2017-08-14 23:11 GMT
சிக்கமகளூரு, 

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுனை சேர்ந்தவர் காசிம் சாப். தனியார் நிறுவன ஊழியர். அதேப்பகுதியை சேர்ந்தவர் ரவி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் கடூர் டவுனில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காசிம் சாப், தனது நண்பரான ரவியுடன் அலுவலகத்திற்கு சொந்தமான பணம் ரூ.5 லட்சத்தை, அருகில் உள்ள வங்கியில் செலுத்த காரில் சென்றார். அப்போது வங்கியில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே 2 பேரும் அந்தப்பகுதியில் நடந்த நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அதன்படி வங்கி அருகே காரை நிறுத்திவிட்டு காசிம் சாப்பும், ரவியும் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றனர். அப்போது காரின் அருகே வந்த மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்து காரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட்சத்தை எடுத்து சென்றுவிட்டனர். இதற்கிடையே திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு ரவியும், காசிம் சாப்பும் காரின் அருகே வந்து பார்த்தனர்.

அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட்சம் திருடப்பட்டு இருந்தது. யாரோ மர்மநபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காசிம் சாப் அளித்த புகாரின்பேரில் கடூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்