போலி கிரெடிட் கார்டு தயாரித்து 20 நிமிடங்களில் ரூ.5 லட்சத்துக்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்கி மோசடி
போலி கிரெடிட் கார்டு தயாரித்து 20 நிமிடங்களில் ரூ.5 லட்சத்துக்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்கி நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.;
கோவை,
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்துவதில் வங்கிகள் எவ்வளவு தான் பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தினாலும் அதை முடக்கி நூதன முறையில் பணத்தை திருடும் கும்பலின் கைவரிசையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு உதாரணமாக கோவையில் நடந்த நூதன மோசடி குறித்த விவரங்கள் வருமாறு:–
கோவை ஈச்சனாரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவர் கோவையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு மணிகண்டனின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் 20 நிமிடங்களில் 69 பரிமாற்றம் மூலம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு பொருட்களை வாங்கியதாக அவரது செல்போனுக்கு தகவல் வந்தது.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கிரெடிட் கார்டு தன்னிடம் இருக்கும்போது தனக்கு தெரியாமல் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கிய தகவல் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து கிரெடிட் கார்டை முடக்குமாறு கூறினார்.
இதையடுத்து அவர் நேற்றுக்காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, தனது கிரெடிட் கார்டில் இருந்து நூதன முறையில் பொருட்களை வாங்கி மோசடி செய்தது குறித்து கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். அதன்பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த நூதன மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:–
மணிகண்டன் தனது கிரெடிட் கார்டை எங்கேயோ பொருட்கள் வாங்க பயன்படுத்தியபோது ‘ஸ்கிம்மர்’ என்ற கருவி மூலம் அவரது கிரெடிட் கார்டின் தகவல்களை மோசடி ஆசாமிகள் பெற்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை பயன்படுத்தி சிலரது கிரெடிட் கார்டுகளின் தகவல்களை பெற்று போலி கிரெடிட் கார்டு தயாரித்துள்ளனர். பின்னர் அந்த கார்டை போலியாக தயாரித்து பொருட்களை வாங்கி மோசடி செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதுபோல மணிகண்டனின் கிரெடிட் கார்டின் தகவல்களையும் மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் மூலம் பெற்றுள்ளனர். பின்னர் அதுபோல் போலியாக கிரெடிட் கார்டு தயாரித்து ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி மோசடி செய்துள்ளனர். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை கொண்டு நேரடியாக சென்று பொருட்களை வாங்கினால் அவற்றுக்கு பின் நெம்பர் என்ற ரகசிய எண்ணை நாம் பதிவு செய்தால் தான் கிரெடிட் கார்டில் இருந்து பணம் அந்த கடையின் வங்கி கணக்குக்கு மாறும்.
ஆனால் ஆன்லைனில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதற்கு பொருட்களை ஆர்டர் செய்த பின்னர் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் ரகசிய எண் (ஓ.டி.பி.) கார்டுதாரரின் செல்போனுக்கு வரும். அந்த ஓ.டி.பி. எண்ணை ஆன்லைனில் பதிவு செய்தால் தான் கிரெடிட் கார்டிலிருந்து பணம் கடையின் வங்கி கணக்கிற்கு மாறும். அந்த ஓ.டி.பி. எண் மணிகண்டனின் செல்போன் எண்ணுக்கு வராமல் போனது எப்படி? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
மோசடி ஆசாமிகள் மணிகண்டனின் கிரெடிட் கார்டை போல போலி கார்டை தயாரித்தபின்னர் அந்த தகவலில் உள்ள அவரது செல்போனுக்கு பதில் மோசடி ஆசாமிகளின் செல்போன் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்த பின்னர் மணிகண்டனின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் வரும் ஓ.டி.பி. எண் மோசடி ஆசாமிகளின் செல்போன் எண்ணுக்கு வந்திருக்க வேண்டும். அந்த ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்த பின்னர் அதற்கான தொகை கடைக்கு மாறியிருக்க வேண்டும். எல்லா பொருட்களும் வாங்கிய பின்னர் மணிகண்டனின் கிரெடிட் கார்டு தகவலில் செல்போன் எண்ணை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு பொருட்கள் வாங்கிய தொகை பற்றிய தகவல் அவரது செல்போன் எண்ணுக்கு சென்றுள்ளது. எனவே மிகவும் கைதேர்ந்த ஆசாமிகள் தான் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
சில வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்கும் போது ஓ.டி.பி. வராத முறை உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையிலான கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வங்கினால் ஓ.டி.பி. வராது என்று கூறப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆன்லைனில் பொருட்கள் எங்கெங்கு வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
எனவே கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது ஓ.டி.பி. வராமல் போனது ஏன்? என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொருட்களை ஆர்டர் பெற்ற நிறுவனங்கள் அந்த பொருளை டெலிவரி செய்வதற்கு முன்பு அவற்றை முடக்க முடியுமா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.