மாவோயிஸ்டுகள் தொடர் அச்சுறுத்தல் கூடலூர்– கேரள எல்லைகளில் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து

மாவோயிஸ்டுகள் தொடர் அச்சுறுத்தல் காரணமாக கூடலூர்– கேரள எல்லைகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கியுடன் நள்ளிரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.

Update: 2017-08-14 23:00 GMT

கூடலூர்,

கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், திருச்சூர் ஆகிய வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர். இதனால் கேரள அதிரடிப்படையினர் வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவோயிஸ்டுகள் வனத்தையொட்டி உள்ள ஆதிவாசி கிராமங்களுக்குள் நுழைந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஆதிவாசி மக்களிடம் இருந்து வாங்கி செல்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலம்பூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் 2 மாவோயிஸ்டுகள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதையொட்டி போலீசாரை பழி வாங்குவோம் என துண்டு பிரசுரங்கள் மூலம் மாவோயிஸ்டுகள் அடிக்கடி அச்சுறுத்தி வருகின்றனர்.

இதேபோல் தமிழக எல்லைக்குள் மாவோயிஸ்டுகள் நுழைந்து விடாதவாறு இருக்க நீலகிரி மாவட்ட எல்லைகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் முகாமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில் மாநில எல்லைகளில் உள்ள கூடலூர், பந்தலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நள்ளிரவில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கூடலூர்– கேரள எல்லைகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு ஏட்டு பாபு உள்பட போலீசார் துப்பாக்கிகளுடன் நள்ளிரவு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் நாடுகாணி, சேரம்பாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்களும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்