ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு: மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்தில் சிக்கியது

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு: மலைப்பாதையில் ஆபத்தை உணராமல் செல்லும் வாகனங்கள் கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்தில் சிக்கியது

Update: 2017-08-14 22:30 GMT

கூடலூர்,

தொடர் விடுமுறையால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மலைப்பாதையில் ஆபத்தை உணராமல் செல்லும் சுற்றுலா வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் விபத்தில் சிக்கியது.

பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 12–ந் தேதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலில் இருந்தும் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

அவர்கள், ஊட்டியில் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து வருகிறார்கள். ஆனால் ஊட்டிக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் விதம் அனைவரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா வாகன டிரைவர்கள் மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் போது விதிமுறைகளை சரியாக பின்பற்றுவது இல்லை. இதனால் விபத்துகள் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் ஊட்டி– மேட்டுப்பாளையம், கூடலூர், மசினகுடி மலைப்பாதைகளில் அறிவிப்பு பலகைகளை பொருத்தி வைத்துள்ளனர்.

மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் போது 2–வது கியரில் இறங்க வேண்டும். எதிர் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் நின்று செல்ல வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து கூடலூர், மசினகுடி செல்லும் மலைப்பாதைகள் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. ஆனால் சுற்றுலா வாகன டிரைவர்கள் மலைப்பாதையில் ஆபத்தை உணராமல் 2–வது கியரை பயன்படுத்தாமல் பிரேக்கை அடிக்கடி மிதித்து வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் கூடலூர் நகருக்குள் வரும் சுற்றுலா வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஊட்டியில் இருந்து கூடலூர் வந்த சுற்றுலா வேன் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் கூடலூர் அக்ரஹார தெருவுக்கு எதிரே உள்ள நடைபாதை மீது வேகமாக ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி நின்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்– இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது வேனில் வந்த சுற்றுலா பயணிகள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு நடைபாதையில் நின்றிருந்த சுற்றுலா வாகனத்தை போலீசார் மீட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் கூடலூர் விநாயகர் கோவில் முன்பு மற்றொரு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தொடர்ந்து அதே பகுதியில் கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது. இந்த தொடர் சம்பவங்களால் கூடலூர் நகரில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்