மக்களுக்கு ஆபத்தான எந்த திட்டத்தையும் பா.ஜனதாவின் ஆட்சி செய்யாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மக்களுக்கு ஆபத்தான எந்த திட்டத்தையும் பா.ஜனதாவின் ஆட்சி செய்யாது என்று திருப்பூரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2017-08-15 00:30 GMT

திருப்பூர்,

திருப்பூரில் கிருஷ்ண பக்தர்கள் நடத்தும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று திருப்பூர் ராம்நகரில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, பெண்களின் முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஆறுகோம்பை வீதியில் உள்ள வீரபத்திர காளியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. விழாவுக்கு பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சின்னச்சாமி, கோட்ட பொறுப்பாளர் பாயிண்ட் மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–

இந்தியா முழுவதும் இந்துக்களின் விழாக்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்களின் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ப.சிதம்பரம், மோடி ஆட்சியில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார். குழப்பத்தை ஏற்படுத்த அவர் நினைக்கிறார். ஊழல் குற்றச்சாட்டில் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் தேடப்படும் நபர் என்று மத்திய அரசு அறிவித்ததை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள். சுப்ரீம் கோர்ட்டு அவர் தேடப்படும் நபர் தான் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். ப.சிதம்பரம் போன்றவர்கள் இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இப்போது கார்த்திக் சிதம்பரம் தான் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அரசு முறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற டாஸ்மாக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும். இதற்கு முதல்–அமைச்சர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் கமல்ஹாசன் மத்திய அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் என்பது களத்தில் இறங்கி மக்கள் கோரிக்கைகளுக்காக போராடுவதாகும். அவர் துறை சார்ந்த பிரச்சினைகளை வைத்து விட்டு மற்றவர்களை குறை கூறுகிறார். மோடி தலைமையில் ஊழல் அற்ற ஆட்சி நடக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் குழந்தைகள் இறந்த சம்பவம் வருத்தத்துக்குரியது. இதை அரசியலாக்குவது தவறு. நீண்ட நாட்களாக மூளை காய்ச்சலால் அங்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். தற்போது மத்திய அரசு ரூ.80 கோடியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை அங்கு அமைக்க இருக்கிறது. இந்த சம்பவத்தில் முதல்–அமைச்சர் மீது குறைகூறுவது சரியல்ல. தமிழகமாக இருந்தாலும், உத்தரபிரதேசமாக இருந்தாலும் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஓ.என்.ஜி.சி.யை பொறுத்தவரை ஷெல், மீத்தேன் கியாஸ் எடுக்கப்போவது இல்லை என்றுள்ளனர். இது புதிய திட்டங்கள் இல்லை என்கிறார்கள். தமிழக மக்களுக்கு ஒப்புதல் இல்லை என்றால் எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது. வைகோவை விட பா.ஜனதா கட்சிக்கும், அரசுக்கும் தமிழக மக்கள் மீது அக்கறை இருக்கிறது. அதனால் மக்களுக்கு ஆபத்தான எந்த திட்டத்தையும் பா.ஜனதாவின் ஆட்சி செய்யாது. வேண்டும் என்றே இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

சட்டரீதியாக எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்வில் மத்திய அரசு ஆலோசனையில் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நடந்தப்பட்ட தேர்வு. தற்போது கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால் அரசு மருத்துவகல்லூரிக்கு மட்டும் நீட் தேர்வு தேவையில்லை என்று ஓராண்டு விலக்கு கேட்கிறார்கள். நிரந்தர தீர்வு என்பது சாத்தியமில்லை. நிரந்தர தீர்வு கொடுப்பது நல்லது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பயிர் பாதுகாப்பு திட்டத்தால் விவசாயிகள் அதிக பலன் அடைந்துள்ளனர். 75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,800 கோடி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் என்று சொல்லிக்கொண்டு டெல்லியில் போராடிக்கொண்டிருப்பவர்கள் தமிழகத்தின் பெருமையை குறைக்காதீர்கள். உள்நோக்கத்தோடு சிலர் போராடி வருகிறார்கள். இது மிகமோசமான மனநிலையில் உள்ள போராட்டம். தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் போராட்டம். இதுபோன்ற போராட்டங்களை நடத்த வேண்டாம். பயிர்பாதுகாப்பு திட்டத்தால் தமிழகம் பயன் அடைந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்