பெரியபாளையம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பெரியபாளையம் அருகே, குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-08-14 22:45 GMT

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் பள்ளதெரு, மேட்டு தெரு, புதிய காலனி, குளக்கரை தெரு உள்ளிட்ட 6 இடங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.

பருவ மழை பொய்த்ததாலும், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மட்டம் குறைந்ததாலும் அந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தற்போது குறைந்த நேரமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், அந்த பகுதியில் வசிக்கும் பலர், மின் மோட்டார் அமைத்து குடிநீரை உறிஞ்சி தங்களது வீட்டில் அமைத்து உள்ள பெரிய, பெரிய தொட்டிகளில் இருப்பு வைத்துக்கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இப்படி மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் மேட்டு தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்கள், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த ஒரு வாரமாக புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் மேட்டு தெருவுக்கு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த மேட்டு தெருவை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு குடிநீர் கேட்டு நேற்று திடீரென திருவள்ளூர்–வெங்கல் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மாளந்தூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும்(தடம் எண்:110) அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மெய்யூர் கிராம ஊராட்சி செயலர் லோகநாதன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். மேட்டு தெரு பொதுமக்களுக்கும் குடிநீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்