தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு இருக்கின்றது என ஆலங்குடியில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2017-08-14 23:15 GMT
ஆலங்குடி,

ஆலங்குடியில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் போன்ற அனைத்து காய்ச்சல்களையும் தடுக்கக்கூடிய தொடர் நடவடிக்கைகள் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு கூடுதல் கவனத்துடன் கையாண்டு வருகின்றது. அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய மேலாண்மை பணிகளை மேற்கொண்டு உள்ளோம். ஒருபுறம் பொதுமக்களிடமும், மாணவ, மாணவிகளிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இன்னொரு புறம் தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரம் மஸ்தூர் என்கின்ற கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் காய்ச்சல் தாக்கம் அதிகமாக இல்லை. இருந்தாலும் கூட வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காய்ச்சல் வார்டுகளை பிரத்தியேகமாக பராமரித்து, உரிய வழிகாட்டுமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு இருக்கின்றது. கிட்டத்தட்ட அவர்களை 100 சதவீதம் குணமாக்கி அனுப்பி கொண்டு உள்ளோம். அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. எல்லா வைரஸ் காய்ச்சல்களையும் டெங்கு காய்ச்சல் என்று எடுத்து கொள்ள கூடாது. இருந்தாலும் கூட அத்தகைய காய்ச்சல்களையும் நாங்கள் டெங்கு காய்ச்சலாகவே எண்ணி, திரவ கரைசல் வழங்கும் சிகிச்சைகளையும், காய்ச்சல் தடு்ப்பு மேலாண்மை வழிகாட்டியின் படி நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருப்பதால் டெங்கு காய்ச்சலை உரிய முறையில் குணப்படுத்தி வருகின்றோம்.

மத்திய சுகாதாரத்துறைக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறையில் இருந்துதான் காய்்ச்சல் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டின் சுகாதாரத்துறையின் வலுவான கட்டமைப்பு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலேயும் கிடையாது. நம்முடைய மாநிலத்தில்்தான் 90 இடங்களில் தீவிர காய்ச்சலை கண்டறியக்கூடிய எலிசா சோதனை மையங்கள் உள்ளன. நாங்கள் புறநோயாளிகளையும், அவர்கள் காய்ச்சல் குணமாகி செல்ல வேண்டும் என்பதற்காக 2 நாட்கள் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை மேற்கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றோம். அதன் காரணமாக எண்ணிக்கை அதிகமாக தெரிகின்றது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்