காரில் கடத்திச்செல்லப்பட்ட 850 மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது

காரில் கடத்திச் செல்லப்பட்ட 850 மதுபான பாட்டில்கள் வெம்பாக்கம் அருகே பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2017-08-14 23:00 GMT
வெம்பாக்கம்,

வெம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து சிலர் ஏராளமான மதுபான பாட்டில்களை பெட்டி பெட்டியாக காரில் வாங்கி செல்வதாக தூசி போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாரதி தலைமையிலான போலீசார் வெம்பாக்கம் அருகே உள்ள பாண்டியன் பாக்கம் கூட்டுரோட்டில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால், அந்தக் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் அந்தக் காரை விரட்டி சென்று சிறிது தூரத்தில் மடக்கி சோதனைச் செய்தனர். அந்தக் காரில் 850 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1லட்சம் இருக்கும்.

இதையடுத்து போலீசார் காரில் வந்த 3 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் உக்கல் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 50), வெள்ளாமலை கிராமத்தைச் சேர்ந்த கோபால் (26), நாகராஜ் (29) என்பது தெரிய வந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக வெம்பாக்கம் டாஸ்மாக் கடையில் இருந்து பெட்டி பெட்டியாக வாங்கி சென்றதாக கூறினர். 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 850 மதுபான பாட்டில்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்