தொடர் விடுமுறை எதிரொலி: வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர்விடுமுறை எதிரொலியாக ஆண்டிப்பட்டி வைகை அணையில் சுற்றுலா பயணிகள் ஏராளமாக குவிந்தனர். மேலும் சுதந்திரதினத்தையொட்டி அணைப்பகுதியில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. அணையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அணைப்பகுதியில் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் மாலை நேரங்களில் தங்கள் பிள்ளைகளுடன் பூங்காவுக்கு வரத்தொடங்கினர். விடுமுறை நாட்களில் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இந்தநிலையில் வார இறுதி விடுமுறை, கிருஷ்ணஜெயந்தி, சுதந்திரதினம் என தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து அணையை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிட கூடுதலாக உள்ளது. நேற்று காலை முதலே அணையை பார்வையிடுவதற்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் வரத்தொடங்கினர். அவர்களை தொடர்ந்து சுற்றுலா பயணிகளும் ஏராளமாக குவிந்தனர். சிறுவர்கள் விளையாட்டு திடலில் உள்ள ரெயில் வண்டி 4 மணிக்கு மேல்தான் இயக்கப்படும். இதனால் காலை நேரத்தில் வந்த சிறுவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனாலும் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், பூங்கா ஆகியவை இருந்ததால் அவற்றில் மகிழ்ச்சியாக விளையாடி பொழுதை கழித்தனர்.
வைகை அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காக காலையிலேயே இங்கு வந்துள்ளோம். பூங்கா பகுதிக்கு வந்ததும் எங்கள் பிள்ளைகள் ரெயில் வண்டி இயக்கப்படும் இடத்துக்கு தான் சென்றனர். ஆனால் அது மாலை நேரம் தான் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதும் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே விடுமுறை நாட்களிலாவது ரெயில் வண்டிகளை நாள் முழுவதும் இயக்க பூங்கா பராமரிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விளையாட்டு அம்சங்களையும் மேம்படுத்தினால் பூங்காவுக்கு வரும் சிறுவர், சிறுமிகள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்றனர்.