தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்: சீமான் பேட்டி

‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவையில் சீமான் கூறினார்.

Update: 2017-08-14 00:15 GMT
கோவை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஒரு ஆண்டுக்கு விலக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ஒரு ஆண்டுக்கு விலக்கு பெற வாய்ப்பிருக்கும் போது நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டியது தானே. அது தான் சரியாக இருக்கும்.

பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு நீட் தேர்வு அவர்களின் எதிர்கால கனவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது.

அ.தி.மு.க. இரு அணிகளும் இணையும் என்று தான் பலமுறை சொல்லி வருகிறார்கள். ஆனால் இ,ணைந்தபாடில்லை. அந்த இரு அணிகளும் இணைவதில் உள்ளது என்ன பிரச்சினை. ஊழல் தான் காரணம். எனவே இந்த ஆட்சியை அகற்றிவிட்டு தேர்தல் மூலம் லஞ்சம், ஊழல் இல்லாத அரசை உருவாக்க நாம் எல்லோரும் பாடுபட வேண்டும்.

மீனவர் பிரச்சினையை மத்தியில் ஆட்சிக்கு வரும் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளால் தீர்க்க முடிவதில்லை. இதற்கு காரணம் நமது வெளியுறவு கொள்கை சொந்த நாட்டு மக்களுக்கே எதிராக உள்ளது தான். மீனவர்களின் படகுகளை சிங்கள கடற்படை பிடுங்கி செல்கிறது.

ஆனால் அதற்கு பதிலாக புதிய படகுகளை தருவதாக பிரதமர் மோடி கூறுகிறார். சிங்களவனுக்கு நேரடியாக படகுகளை கொடுக்காமல் நமது மீனவர்கள் மூலமாக அவர்களுக்கு கொடுப்பதற்கு இது சமம். புதிய படகுகளை கொடுத்தாலும் அதையும் சிங்களவன் பிடுங்கி சென்று விடுகிறான். மீனவர்களிடம் இருந்து பறித்த படகுகளை வாங்கி கொடுக்க சொன்னால் புதிய படகுகளை கொடுப்பேன் என்று பிரதமர் கூறினால் என்ன அர்த்தம்.

சீனா, இலங்கையில் கடற்படை தளம் அமைக்கிறது. இதை தடுக்க மத்திய அரசு முயற்சிக்க வில்லை. இதையெல்லாம் பேசினால் தேச துரோகம் என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்