திருப்பூரில், உலகத்தரத்திற்கு இணையாக எலாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது பெருமைக்குரியது
திருப்பூரில், உலகத்தரத்திற்கு இணையாக எலாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது பெருமைக்குரியதாக அமைந்துள்ளது என்று இந்திய ஏற்றுமதியாளர் சங்க கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் சக்திவேல் பேசினார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 3–ம் ஆண்டு தொடக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பயிற்சி மைய தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கோவிந்தசாமி தொடக்கவுரையாற்றினார். செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்று பேசினார். தொழில் அதிபர்கள் முத்துச்சாமி, பழனிச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் துணை தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, செயலாளர் விஜயகுமார், டீமா தலைவர் முத்துரத்தினம், நிப்ட் டீ கல்லூரியின் திறன் மேம்பாட்டு தலைமை பயிற்சியாளர் சிவஞானம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் சக்திவேல் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
திருப்பூரில் நேற்றைய தொழிலாளர்கள் இன்றைய முதலாளிகளாக இருப்பது பெருமையாக உள்ளது. தாம் கற்ற தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் திருப்பூர் முதன்மையாக விளங்குகிறது. விளையாட்டுவீரர், வீராங்கனைகள் ஆடைகள், குழந்தைகள் ஆடைகள் உள்பட அனைத்து ஆடைகளுக்கும் எலாஸ்டிக் முக்கியமாக அமைந்துள்ளது. மற்ற நாடுகளை விட திருப்பூர் எலாஸ்டிக் மிக சிறந்ததாக உள்ளது.
திருப்பூரில் உலகத்தரம் வாய்ந்த எலாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது பெருமைக்குரியதாக உள்ளது. திருப்பூரில் எலாஸ்டிக் துறை இல்லையென்றால் ஏற்றுமதி வர்த்தகம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கோவிந்தசாமி பேசுகையில், கடந்த 2015–ம் ஆண்டு தொடங்கப்பட்ட சங்கம் தற்போது 3–ம் ஆண்டில் கால் பதிக்கிறது. சங்கத்தின் முக்கிய 2 நோக்கங்களான டெப்போ மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் ஆகியவை தற்போது நிறைவேறி உள்ளது. தொழிலாளர்கள் மற்றும் மூலப்பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் இருந்தால் பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகளை சமாளிக்கலாம். உற்பத்தி செலவை குறைப்பது பற்றியும், தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் வகையிலும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக டமேட்டா நேரோ பேப்ரிக் பயிற்சி மையத்தை பப்பீஸ் சக்திவேல் தொடங்கிவைத்தார். விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
பின்னலாடை துறையின் உள்ளாடை உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளான எலாஸ்டிக் உற்பத்தியில் செயற்கை நூலிழைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக மத்திய அரசு குறைக்க வேண்டும். எலாஸ்டிக் உற்பத்திக்கு மற்றொரு முக்கிய மூலப்பொருளான ரப்பரை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ரப்பருக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.
நிப்ட் டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து பிரதமரின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் வரும் டெக்ஸ்டைல் துறையில் எலாஸ்டிக் துறையின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பாட திட்டத்தை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. எனவே மத்திய பாடத்திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். இதன்படி தலைவராக கோவிந்தசாமி, உதவி தலைவர்களாக காளிதாஸ், செல்வராஜ், செயலாளராக சவுந்தரராஜன், இணை செயலாளர்களாக முருகசாமி, முருகநாதன், பொருளாளராக சந்திரமோகன் மற்றும் நிர்வாககுழு உறுப்பினர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஆகியோர் பதவியேற்றனர். முடிவில் சங்கத்தின் பொருளாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.
2 நிறுவனங்களில் இருந்து உருவாகிய பெரிய எலாஸ்டிக் துறை சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 200–க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 80 சதவீத உரிமையாளர்கள் எலாஸ்டிக் துறையின் தாய்–தந்தை என்று அழைக்கப்படும் எம்.பி. டேப்ஸ் மற்றும் ஜே.வி. டேப்ஸ் என்ற 2 நிறுவனங்களில் பணி புரிந்த அனுபவத்தின் மூலமாக தற்போது எலாஸ்டிக் உரிமையாளர்களாக மாறி உள்ளனர். விழாவில் கலந்து கொண்ட எம்.பி.டேப்ஸ் உரிமையாளர் முத்துசாமி மற்றும் ஜே.வி.டேப்ஸ் உரிமையாளர் பழனிச்சாமி ஆகியோருக்கு திருப்பூர் எலாஸ்டிக் துறையின் முன்னோடி என்ற விருது மற்றும் நினைவு பரிசு சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதில் பேசிய சங்க தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அந்த 2 நிறுவனங்களையும் பல்வேறு கிளைகளை உருவாக்கிய ஆலமரம் என்று பெருமிதத்துடன் பேசினார்கள்.