கோரிமேட்டில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு நண்பர்களுக்கு வாட்ஸ்–அப்பில் தகவல் தெரிவித்து விட்டு விஷம் குடித்தார்
கோரிமேட்டில் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
புதுச்சேரி,
புதுவை மாநிலம் காரைக்கால் டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்தவர் கருப்பையன்(வயது48). இவருடைய மகன் கபிலேஷ்(18). இவர் கோரிமேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து புதுவை காலாப்பட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். ஆனால் அவருக்கு என்ஜினீயரிங் படிக்க விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 8–ந் தேதியன்று கபிலேஷ் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் உள்ள அறையில் இருந்தார். நண்பர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் விடுதி அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது கபிலேஷ் விஷம் குடித்தநிலையில் அறையில் மயங்கி கிடந்தார். உடனே அவர்கள் கபிலேசை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
என்ஜினீயரிங் படிக்க விருப்பமில்லாமல் மருத்துவக் கல்லூரியில் சேர கபிலேஷ் நுழைவுத் தேர்வு எழுதி இருந்ததாகவும், தேர்வில் தோல்வி அடைந்ததால் ஏமாற்றத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நேற்று காலை கல்லூரி விடுதியில் தங்கி இருந்தபோது விஷம் குடித்துள்ளார். அதற்கு முன் அவர் இதுகுறித்து தனது நண்பருக்கு வாட்ஸ் –அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு சென்று மாணவர் கபிலேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.