பெங்களூருவை நிர்மாணித்த கெம்பேகவுடாவின் பணி மகத்தானது

ஆதி சுஞ்சனகிரி மடத்திற்கு சென்று மடாதிபதியிடம் ஆசி பெற்ற அமித்ஷா, பெங்களூருவை நிர்மாணித்த கெம்பேகவுடாவின் பணி மகத்தானது என்று கூறினார்.;

Update: 2017-08-13 22:39 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலையொட்டி பா.ஜனதா கட்சியை பலப்படுத்துவதற்காக 3 நாட்கள் சுற்றுப்பயணமாக, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்தார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா உள்பட பல்வேறு தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அமித்ஷா, சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று அவர் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகாவில் அமைந்துள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு சென்றார். அங்கு மடாதிபதி நிர்மலானந்தாநாதா சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அங்கு நடந்த பூஜையிலும் கலந்து கொண்டார்.

அதையடுத்து அவர் முன்னாள் மடாதிபதி பாலகங்காதரநாதா சுவாமிகளின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆதி சுஞ்சனகிரி மடத்தின் சார்பில் சமூக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளை பாராட்டுகிறேன். இந்த நேரத்தில் பெங்களூருவை நிர்மாணித்த நாடபிரபு கெம்பேகவுடாவையும் நினைவு கூற வேண்டும். அவரது பணி மகத்தானது. அவருடைய பணிகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இதில் குறிப்பிடத்தக்க வி‌ஷயம் என்னவென்றால் கெம்பேகவுடாவும், ஆதி சுஞ்சனகிரி மடத்தில் இருந்து வந்தவர் என்பது தான். ஆதி சுஞ்சனகிரி மடமும், கெம்பேகவுடாவும் ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் கூடுதல் பெருமை.

உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை அந்தந்த நாட்டு அரசுதான் செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆதி சுஞ்சனகிரி மடம் போன்று பல்வேறு மடங்கள், தனியார் அமைப்புகள் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றன. அரசைக் காட்டிலும் ஒரு படி மேலே போய் மடங்களும், தனியார் அமைப்புகளும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றன. இது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்